காவல் ஆணையாளர் அலுவகத்தில் அளித்த புகார் மனுவில், பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதல்வரின் புகைப்படத்தை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தனர்.
கோவை: பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் சமீப காலங்களாக பாஜக மற்றும் அதன் சார்பு இந்து இயக்கங்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவல்துறையினரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முதல்வரின் புகைப்படத்தை காவல்துறை முன்னிலையில் பாஜகவினர் கிழித்து அரஜாகத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த செயல்பாட்டினால், காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறதா என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பாக, தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.