மதச்சார்பின்மையை போதிக்க வேண்டிய பள்ளிகளில், இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று த.பெ.தி.க வினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வர வேண்டும் என ஆசிரியர் ஒருவர் பெற்றோர்களிடம் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ இன்று காலை முதல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த ஆடியோ வெளியானதை தொடர்ந்து, இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக மாநகர செயலாளர் சாஜித் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சாஜித், அனைத்து மதத்தினரும் படிக்கும், மதச்சார்பின்மையை போதிக்க வேண்டிய பள்ளிகளில், இது போன்று ஒரு மதத்தினரை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும், பள்ளிகள் கொடுக்கும் இது போன்ற அழுத்தங்களால் பெற்றோர்களுக்கு பொருளாதார பாரத்தையும் ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாக அவர் கூறியதாக, தெரிவித்தார்.