கொடிசியா வணிக வளாகத்தில் “உள் எரிப்பு என்ஜினிலிருந்து சுத்தமான மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதற்கான முயற்சிக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கருத்தரங்கு" நடைப்பெற்றது.
கோவை: கோயம்புத்தூரில் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான கருத்தரங்கு கொடிசியா அரங்கில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றினால் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மாசை கட்டுக்குள் கொண்டுவர பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதற்கான பிரயத்தனங்களை உலக நாடுகள், முக்கியமாக இந்தியா, எடுத்து வருகிறது.
இந்த சீரிய முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவிலுள்ள உலக வள நிறுவனம் (World Resources Institute of India), பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்குச் சுமுகமான மற்றும் சமமான முறையில் மாற்றத்தை ஏற்படுத்த குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) இணைத்துச் செயல்பட உள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மிக முக்கியமான மாற்றத்தை எவ்வாறு கொண்டு வரலாம் என்பதைப் பற்றியும் விவாதிக்க அந்த நிறுவனம் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா வணிக வளாகத்தில் “உள் எரிப்பு என்ஜினிலிருந்து சுத்தமான மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதற்கான முயற்சிக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கருத்தரங்கை நடத்தியது.
தூய்மை மற்றும் பழமைவாய்ந்த மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்வதில் உள்ள சாதக பாதகங்களைச் சிறிய வர்த்தகங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, கோயம்புத்தூர் ஒரு முன்னணி ஆட்டோமொபைல் ஹப்பாக விளங்குகிறது. இத்துறை அதிகளவில் வேலை வாய்ப்பினை அளிப்பதாகவும் உள்ளது.
எனவே, மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்காக இத்துறையை தயார் படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இம்முயற்சிகள், தமிழ்நாடு தன்னுடைய குறைந்த கார்பன் மாற்று லட்சியத்தை அடையவும், இந்தியா தன் காலநிலை இலக்குகளை அடையவும் உதவும்.
இந்த கருத்தரங்கை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்துறை அமைச்சகத்தின் கூடுதல் வளர்ச்சி ஆணையர் சந்திரசேகர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- “கோவையில் சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், தொழில்நுட்ப மையம் அமைக்க 13 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 -3 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும்,”
கரிம எரிபொருள் வாகனங்கள், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றம் பெறுவது காலத்தின் கட்டயமாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மின்சார வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு இதற்கென கிளஸ்டர் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கிளஸ்டர் திட்டங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கிளஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பல கிளஸ்டர்கள் வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கியுள்ளன. இவற்றின் பயன்பாடுகளுக்கென பொதுவான இயந்திர வசதி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பொது வசதி மையம் ஒன்று கோவை சூலூர் அருகே உள்ள கலங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படும்.
மாநில அரசு இந்த மையத்துக்குத் தேவையான 13 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு முதல் கட்டமாகக் கலப்பின எரிசக்தி வாகன திட்டத்தை ஏப்ரல் 2015 ல் அறிவித்து 2019 வரை செயல்படுத்தியது. இரண்டாம் கட்டமாக இது 2024 வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உயர்மட்ட குழு விவாதத்தில் டாக்டர் அருண் பாண்டா, சீனியர் 'பெல்லோ, உலக வள நிறுவனம் (இந்தியா) மற்றும் சிறு, குறு, மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர், வி.திருஞானம், கொடிசியா தலைவர், செல்வி சாந்த ஷலா, மாநில வணிக வசதி அலுவலர், கோயம்புத்தூர், எம்எஸ்எம்இ வர்த்தகம் மற்றும் முதலீடு ஊக்குவிக்கும் பணியகம், திருப்பதி ஸ்ரீனிவாசன், மேலாண்மை இயக்குனர், இ-புரொபெல்ட், ரவி நந்தன் சின்ஹா, இயக்குனர், எம்எஸ்எம்இ பிசினஸ் ஃபோரம், டாக்டர் சங்கர் வேணுகோபால், துணை தலைவர், மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அந்த நாளின் இரண்டாவது அமர்வான வட்ட மேஜை மாநாட்டில் தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான எம்.எஸ்.எம்.இக்களின் சங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பம், நிதி, மின்சார வாகன நிபுணர்கள், இந்த மாற்றத்திற்காக தேவையான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டன.