வருமானத்தை விட டீசல் செலவு அதிகமானதால் கேரளா போக்குவரத்து கழகம் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்த நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் பேருந்திற்காக வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கோவை: கடன் சுமை காரணமாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை குறைத்துள்ளதால், கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் விட டீசல் செலவு அதிகரித்து வருவதால்நீண்ட தூர சேவை பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள் குறைக்கப்பட்டு உள்ளது.
கடன் சுமை காரணமாக பல்வேறு மாநிலத்தின் சாதாரண சேவை பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால், கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரள மாநில பேருந்துகள் இல்லாமல்பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
குறிப்பாக கோவையிலிருந்து கேரளாவுக்கு தொழில் சம்பந்தமாகச் செல்லும் பயணிகள், அதே போல இரண்டு நாட்கள் தொடர் அரசு விடுமுறை என்பதால், சொந்த ஊருக்குச் செல்வதற்கும் உரிய பேருந்து வசதி இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்திற்காக வரிசையில் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருக்கின்றனர்.