துடியலூர் அருகே டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஆக்சில் உடைந்து தண்டவாளத்திற்கு நடுவே பழுதாகி நின்றதால் பரபரப்பு

துடியலூர் ரயில்வே கேட் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளம் சாலையில் இருந்து 1 அடி உயரமாக உள்ளதால், லாரி மற்றும் பேருந்து போன்ற தண்டவாளத்தை கடக்கும் வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: துடியலூர் ரயில்வே கேட் வழியாக லாரி ஒன்று டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக மதுபானங்களை ஏற்றிச் சென்ற போது, தண்டவாளத்தை கடக்கும் போது, திடீரென ஆக்சில் உடைத்து பழுதாகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் இடையே செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக அந்த வழித்தடத்தில் இருந்த தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களின் உயரத்தை விட சுமார் ஒரு அடி வரை உயரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிலும், துடியலூர் பகுதியில் புதிதாக தண்டவாளங்கள் மாற்றப்பட்ட நிலையில் அது தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுவரை துடியலூர் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பல இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்துள்ளதாகவும், கார்களின் அடிப்பகுதி தண்டாவாளத்தில் உரசி சேதமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் தண்டவாளங்களை கடக்க முடியாமல் ஆக்சில் உடைந்து பழுதடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு 8.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில், அவ்வழியாக சுமார் 30 டன் எடையுள்ள டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.

அப்போது, லாரியின் ஆக்சில் உடைந்து தண்டவாளத்தின் நடுவே பழுதாகி அப்படியே நின்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து கேட் கீப்பர், நீலகிரி விரைவு ரயிலுக்கு உடனடியாக சிகப்பு விளக்கு காண்பித்ததால், லாரிக்கு 50 மீட்டர் முன்னதாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக லாரி மீது ரயில் மோதாமல், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் லாரியை தள்ளி தண்டவாளத்தில் இருந்து நகர்த்த முயன்றனர். ஆனால், லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து கயிறு கட்டி இழுக்க முயன்றும் முடியாததால், கிரேன் வர வழைக்கப்பட்டு பெல்ட் மூலம் கட்டி இழுத்த போது, லாரி நகராமல் பெல்ட் அறுந்ததால், இரும்பு சங்கிலி மற்றும் இரும்பு ரோப் மூலம் கட்டி இழுக்க முயன்றும் முடியாமல் போனது.

பின்னர் ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியின் பின்னால் இருந்து தள்ளி விட, முன்னால் கிரேன் இழுத்து தண்டவாளத்தில் இருந்து லாரியை நகர்த்தினர். இதனையடுத்து, உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டு அங்கு காத்திருந்த நீலகிரி விரைவு ரயில் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.

தண்டவாளத்தில் லாரி சிக்குவதற்கு சிறிது நேரம் முன்பு, இதே போல் மற்றொரு லாரியின் ஆக்சில் உடைந்தது என்றும், அவ்வழியாக வந்த அரசு விரைவு சொகுசு பேருந்தும் தண்டவாளத்தில் சிக்கி முன்பக்க படிக்கட்டு உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, உடனடியாக தண்டவாளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...