சோழிபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, 30 சவரன் நகை மற்றும் 10 லட்சம் பணம் கொள்ளையத்துச் சென்ற மர்ம நபர்களை மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சோழிபாளையம் அருகே பெண்ணை கொலை செய்துவிட்டு 30 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து விட்டு, தடயங்களை அழிக்க மிளகாய் பொடியை தூவிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோழிபாளையம் அடுத்த சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கோபாலன் (65) - முத்துலட்சுமி (60) தம்பதி. இவர்களது இரண்டு மகன்களும் திருமணமாகி வேலை காரணமாக வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். திருப்பூர், குமார் நகர் பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் கோபாலன், சீனிவாசா நகரில் 9 வீடுகளை வாடகைக்கும் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போது, அவரது மனைவி முத்துலட்சுமி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்க நடவடிக்கை எடுப்பட்டது.
அப்போது, கொள்ளையர்கள் தடயங்களை அழிப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றதால், கைரேகை மற்றும் தடயங்களை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில், நேரில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதுடன், தடயங்களையும் அழித்துச் சென்ற சம்பவம் சீனிவாசா நகர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.