Exclusive: கோவை அரசு மருத்துவமனையில் அவலம்; குடிநீர், கழிப்பிட வசதி, போதிய தங்குமிடம் இல்லாமல் அவதிப்படும் பயிற்சி மருத்துவர்கள்..!

கோடிக்கணக்கான செலவில் புதிய கட்டிடங்கள், நவீன மருத்துவ இயந்திரங்கள், கூடுதல் அவசர சிகிச்சை பிரிவுகள் அமைத்து, கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டும் அரசாங்கம், பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க கோரிக்கை வலுத்துள்ளது.



கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெற பெரிதும் நம்பி இருப்பது, நூற்றாண்டு பழமையான கோவை அரசு மருத்துவமனையை தான், என்றால் அது மிகையாகாது. 24 மணி நேரமும், பரபரப்பாக காணப்படும் கோவை அரசு மருத்துவமனையில், பல்வேறு உயர் சிகிச்சை பிரிவுகள், மருத்துவ கருவிகள், பரிசோதனை இயந்திரங்கள் என தனியார் மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

இந்த மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவ மாணவியர் பணியாற்றி வருகின்றனர். பிரசவம், குழந்தைகள் பிரிவு, நரம்பியல், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என அனைத்துபிரிவுகளிலும் இந்த இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவ மாணவியரின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாகும்.

சுழற்சி முறையில், 24 மணி நேரமும்சேவையில் ஈடுபட்டு, மக்களின் பிணி போக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று பயிற்சி மருத்துவர்களின் பகிரங்க குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலகட்டங்களில் அவர்கள் உயிரை பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல், பி.பி.இ உடல் கவசத்தை தொடர்ந்து அணிந்தபடி,தொற்றுக்கு ஆளாகி, சாரை சாரையாக வந்த மக்களின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை மற்றும் செவிலியர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி கொண்டாடிய இதே கோவையில் தான், இன்றளவும் அரசு பயிற்சி மருத்துவர்கள் சுகாதாரமான கழிவறை, குடிநீர், தங்கும் இடம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக போராடி வருகிறோம், என்று வருத்தம்பட தெரிவிக்கின்றனர்.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு, சாதனைகளை, பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் காட்டும் முனைப்பு அங்கு பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு காட்டுவதில்லை, என்று வேதனைப்பட தெரிவிக்கின்றனர் பயிற்சி மருத்துவர்கள்.

வரும் நோயாளிகளிடம் தண்ணீர் நன்கு பருக வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், எங்கு தண்ணீர் குடித்தால், சிறுநீர் கழிக்க செல்ல வேண்டுமே என்ற பயத்தில், தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம், என்று உடல் அளவிலும், மனதளவிலும் அவர்கள் சந்திக்கும் அவலங்களை நம்மிடம் தெரிவித்தனர்.

இது குறித்து பயிற்சி டாக்டர்கள் சிலர் கூறியதாவது:

சிறு வயது முதல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மருத்துவப் படிப்பு படித்து, தற்போது பயிற்சி பெற்று வருகிறோம். நோயாளிகள் மீது நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், பயிற்சி மருத்துவ மாணவ மாணவியருக்கு குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படுவதில்லை.

குறிப்பாக, கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால் ஒவ்வொரு முறையும் விடுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கழிப்பறை பிரச்சனை காரணமாக, பயிற்சி மருத்துவர்கள் பலர் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து வருகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால், இது தான் நிதர்சனம்.

குடிநீர் வசதி, மெஸ் வளாகத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் விடுதியில், குடிநீர் வசதி இல்லை. குடிநீர் வசதி செய்து தர, தேவையான கட்டமைப்பு வசதிகள் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை குடிநீர் அதில் வந்தபாடில்லை.

36 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றினாலும் தங்குமிடம் கிடைப்பதில்லை

ஹவுஸ் சர்ஜன் என்று சொல்லக்கூடிய பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் தங்குமிடம் அமைத்து தர வேண்டியது மருத்துவமனை நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், ஒவ்வொரு முறையும் புதிய பயிற்சி மருத்துவர் குழு பணியாற்ற வரும்போது, அதற்கு முன் தங்கி இருக்கும் மாணவ மாணவியர் அறையை விட்டு வெளியேற மிகுந்த காலதாமதம் ஆவதால், இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டும் பயிற்சி மருத்துவர்கள்,  மருத்துவ நிர்வாகம் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே அறையை காலி செய்ய முடியும். இது தவிர, தற்போது பயிற்சி மருத்துவ மாணவ மாணவியருக்கு தங்கும் அறைகள் விடுதியில் வழங்கப்பட்டாலும், போதிய எண்ணிக்கையில் படுக்கைகள் இல்லை. 

24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் என ஒவ்வொரு பயிற்சி மருத்துவ மாணவ மாணவியரும் தொடர்ந்து பல மணி பணியாற்றி வருகின்றனர். போதிய தங்குமிடம் இல்லாத காரணத்தால் நள்ளிரவு நேரங்களில் கூட சில மாணவியர், ஆட்டோ அல்லது டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களில் தனியாக தாங்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. 

பல பயிற்சி மருத்துவ மாணவ மாணவியர், தங்கள் சொந்த செலவில் வெளியே தனியாக வீடு அல்லது ரூம் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர், என்று தெரிவித்தனர் பயிற்சி மருத்துவர்கள். 

சுத்தம் என்றால் என்ன...? 

சுகாதாரமற்ற சூழல்களில் வாழும் மக்கள், குறிப்பாக சுத்தம் இல்லாத கழிவறைகள் மூலம் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாகி, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்வர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள், தங்கும் அறைகள் மற்றும் கழிப்பறைகளில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சுத்தமா..? அப்படி என்றால் என்ன..?  என்று கேட்கும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. 

என்ன தான் தீர்வு..? 

போர்க்கால அடிப்படையில், பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல், எதிர்வரும் நாட்களிலும் மேற்குறிப்பிட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த எந்த பிரச்சினைகளும் ஏற்படாத வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான், மன நிறைவுடன்  பயிற்சி மருத்துவ மாணவ மாணவியர் பணியாற்ற முடியும் என்பதே பயிற்சி மருத்துவர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. 

அடிப்படை வசதி பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு - டீன் நிர்மலா

மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி போதிய எண்ணிக்கையில் ஏற்படுத்தி தர, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, பெண்கள் விடுதியில், குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது துரிதப்படுத்தப்படும்.

பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி பணிபுரிய விடுதியில் இடவசதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவது உண்மைதான். அதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில பயிற்சி டாக்டர்கள் தாங்களாகவே வெளியே வாடகைக்கு வீடு அல்லது ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.

அதிக நேரம் பணியாற்றுவது பொறுத்தவரை, மருத்துவக் கல்வி முடித்து பயிற்சிக்கு மருத்துவ மாணவ மாணவியர் வரும்போது சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டும், அதற்கு பலர் விருப்பம் தெரிவிப்பதில்லை.

மருத்துவ மாணவ மாணவியர் ஓய்வு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட துறை தலைவர்களிடம் தெரிவித்து, அல்லது தங்களுடன் பணியாற்றும் சக பயிற்சி மருத்துவர்களிடம் தெரிவித்து ஓய்வு எடுத்து கொள்ளலாம். மருத்துவமனை வளாகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினையாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், என்னை நேரிலோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிப்படை வசதி பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆட்சி மாறியும், பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை - சமூக ஆர்வலர்கள்

பொதுவாக, வேலை செய்யும் ஊழியர்களுக்கு, குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்  என்கிறது சட்டம். அப்படியிருக்க, கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள், அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர் என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டி உள்ளது.      

கொரோனா உச்சத்தின் போது, கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் போதிய உணவு கிடைக்காமல், பெரும் இன்னல்களை சந்தித்து வந்ததும், சில பயிற்சி மருத்துவர்களின் பெற்றோர் அப்போது ஆட்சியில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலரை டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவர்கள் பிரச்சனை புதிதல்ல. ஆட்சி மாறியும், பயிற்சி மருத்துவர்கள் சந்தித்து வரும் பிரச்சனை இன்றளவும் மாறவில்லை என்பதே நிதர்சனம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

கோவை அரசு மருத்துவமனையில், கோடிக்கணக்கான செலவில் புதிய கட்டிடங்கள், நவீன மருத்துவ இயந்திரங்கள், கூடுதல் அவசர சிகிச்சை பிரிவுகள் அமைத்து, கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டும் அரசாங்கம்,  வருங்கால மருத்துவர்களாக சேவை செய்யவுள்ள பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும், என்பதே  பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...