புகாரை முறையாகப் பெற்று விசாரிக்காத சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் கமிஷனர் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தற்கொலைக்கு முயன்ற நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை: கோவையில் புகாரை முறையாக விசாரிக்காத காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை இருகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். தற்போது வேலை இல்லாமல் மன உலைச்சலிலிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் நபருடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கிருஷ்ணன் கோவை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் புகாரை பெறாமல் அலட்சியப்படுத்தியதாக கூறி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்குப் புகார் அளிக்க வந்தார்.
அப்போது வீட்டிலிருந்து வரும் போதே சாணி பவுடரை குடித்து வந்ததால்உடல்நலம் குன்றிய நிலையில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் சாணிபவுடர்குடித்து விட்டு அங்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், புகார் அளித்தும் முறையாக விசாரிக்காமல் அலட்சியப்படுத்தியதாகவும், இதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, புகாரை முறையாகப் பெற்று விசாரிக்காத சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் கமிஷனர் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற கிருஷ்ணன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.