ஒரு சில நாளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ், பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து சோமனூர் சாலையில் மதுக்கடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை: சோமனூர் சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக ஒன்றிணைந்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூர் செல்லும் சாலையில்கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த டாஸ்மாக் கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் நல மருத்துவமனை பள்ளிகள், தேவாலயம் அமைந்துள்ள இடத்தில்டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து ஒரு சில நாளில் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ், பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்துசோமனூர் சாலையில் மதுக்கடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மதுக்கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தேவாலயம், குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நிறைந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் எனவும், ஏற்கனவே பல கட்ட போராட்டம் நடத்தி மதுக்கடை அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் மதுக்கடை கொண்டுவந்தால் சட்டவிரோத சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், இப்பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு தடுத்த நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் அடுத்த கட்டமாக மதுக்கடை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.