உபி அரசை கலைக்க கோரி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தடையை மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கோவை: உபி அரசை கலைக்க கோரி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அண்மையில் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நுபுர் சர்மா உள்ளிட்ட அவதூறு கருத்துகளை தெரிவித்தவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை, மற்றும் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்தல் போன்ற ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வரும் உத்திரப்பிரதேசம் அரசை கண்டித்து உபி அரசை கலைக்க வலியுறுத்தி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.
அப்போது போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சிலர் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை முற்றுகையிட முயன்றதால் உள்ளே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.