11-வது வார்டு திமுக கவுன்சிலர் தனது வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் நடைபெறுவதில்லை, இந்த நிலை தொடருமானால் தான் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பிரதாப் முருகன் பொறுப்பேற்ற முதல் கூட்டம் நேற்று மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைப்பெற்றது.
மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற வடக்கு மண்டலத்திற்க்கு உட்பட்ட 20 மாமன்ற உறுப்பினர்களும் அவரவர் வார்டு பகுதிகளில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர்.
அதில், பெரும்பாலும் சாலை சீரமைப்பு, குடிநீர், குப்பைகளை அகற்றுதல் முக்கிய பிரச்சனைகளாக பேசபட்டது. அவர்களது கோரிக்கைகளை கேட்ட மாநகராட்சி ஆணையாளர், விரைவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகள் சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.
அப்போது, எழுந்து பேசிய 11-வது வார்டு திமுக கவுன்சிலர் சிவா (எ) பழனிச்சாமி தனது வார்டில் குப்பை அகற்றும் பணிகள் நடைபெறுவதில்லை என்றும் சமந்தப்பட்ட அதிகாரிகளும் தங்களின் பேச்சை கேட்பதில்லை, என்றார்.
"இதே நிலை தொடருமானால், என்னால் மக்களுக்கு பதில் சொல்ல இயலாது, காலவரையற்ற தாமதம், கடும் மன உளைச்சலை தருகிறது. இதே நிலை தொடருமானால், நான் மாமன்ற பதவியை ராஜினாமா செய்வேன்" எனக் கூறி அங்கிருந்தவர்களை அதிரச் செய்தார்.
தன் வார்டில் பணிகள் நடைபெறாமல் உள்ளதால், தனக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன பதில் சொல்வது..? என்ற கேள்வி எழுவதால், தன் பதவியை ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற ஒரு மாமன்ற உறுப்பினர் தெரிவித்தது கூடத்தில் உள்ள அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.