கோவையில் அடுத்த 5 நாட்கள் வெப்பம் அதிகரித்து காணப்படும் - வேளாண் பல்கலை காலநிலை மையம் தகவல்!

கோவையில் எதிர்வரும் 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை பதிவாகும் என்பதால், பயிர்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அறிவுரைகளை வேளாண் பல்கலை காலநிலை மையம் வழங்கியுள்ளது.


கோவை: கோவையில் எதிர்வரும் 5 நாட்கள் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வேளாண் பல்கலை காலநிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் வெளிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எதிர்வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

பகல் நேர, இரவு நேர வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்பதால், நடவு செய்யப்பட்ட நவரை பருவ நெல் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சி வர வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு, 100 கிராம் தயோமீத்தாக்ஸிம் மருந்தினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேற்கு வேளாண் மண்டலத்தில் வறண்ட காற்றானது 4-8 கி.மீ., வரை வீச வாய்ப்புள்ளதால், ஐந்து மாதங்களுக்கு மேலான வாழை மரங்களுக்கு போதிய முட்டு கொடுக்க வேண்டும்.

வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு ராணிகட் நோய் வரவாய்ப்புள்ளதால், அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தகுந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

வெப்பநிலை அதிகம் உள்ளதால், கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு, தீவனத்துடன் 50 கிராம் டானுவாஸ் ஸ்மாட் தாது உப்பு கலவையை அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். குடிநீரை போதிய அளவு வழங்கவேண்டும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter