மோடியை நம்புவதை விட சாவதே மேல்.. விவசாயிகள் கால வரையற்ற உண்ணாவிரதம்!

சென்னை: காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டதைக் கண்டித்து சென்னை விருந்தினர் மாளிகை முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றாக கருத வேண்டிய மத்திய அரசு, கர்நாடகத்திற்கு சார்பாக நடந்து கொள்கிறது.

இதனால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசின் கர்நாடக அரசு சார்பு போக்கைக் கண்டித்து இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதம் குறித்து பி.ஆர். பாண்டியன் கூறியிருப்பதாவது:

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. தமிழகத்திற்கு காவிரியின் மீதுள்ள உரிமையை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவிரி பிரச்சனையில் உறுதியான தீர்வை மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் நடந்த வன்முறையில் உடைமைகளை இழந்த தமிழர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியாது என்று கூறி விட்டது மோடி அரசு. மோடியை நம்புவதை சாவதே மேல் என்ற நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். மோடி நாடாளுமன்றத்திற்குத்தான் பிரதமர், இந்த நாட்டுக்குத்தான் பிரதமர். ஆனால்அவர் உச்சநீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டர் என்பதை மோடி உணரத் தவறியதால்தான் இந்த நிலை எங்களுக்கு வந்துள்ளது.

7ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தி்ல்இறங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Newsletter