கோவை கற்பகம் பல்கலையில் ‘பூம்பொழில்-2023’ உரையரங்கம்!

கோவையில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 7, 10, 11 ஆகிய நாட்களில், முதலாமாண்டு மாணவர்களுக்கான ‘பூம்பொழில்-2023’ உரையரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 7, 10, 11 ஆகிய நாட்களில் ‘பூம்பொழில்-2023’ உரையரங்கம் நடைபெற்றது.

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறை - தமிழ் பிரிவின் சார்பில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ‘சிந்தனைச் சிறகுகள்’ - வாழ்வியல் மதிப்புக்கூட்டுப் பயிலரங்கம் கடந்த ஜூலை 7ஆம் தேதி நடைபெற்றது.

கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி, ‘சிறகை விரி’ என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

தெளிந்த சிந்தனையும், திடமான நம்பிக்கையும், தளராத முயற்சியும் சாதனை வானில் உயரப் பறப்பதற்குச் சிறகுகளாகும். சாதனைப் பயணமானது சமுதாயத்துக்கும் பயன்படுகிறவகையில் பரந்தநோக்கம் உடையதாக அமையவேண்டும்.

அவ்வகையில் மாணவர்கள், தனிமனித விழிப்புணர்வும், சமுதாயப் பொறுப்புணர்வும் உள்ளவர்களாக உருவாகவேண்டும். அதற்குத் துணைசெய்கின்ற பெற்றோர்களின் தியாகத்தையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் மாணவர்கள் மறவாமல் போற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற பூம்பொழில் உரையரங்கில், கோவை பட்டிமன்றப் பேச்சாளர் கவிஞர் மீ. உமாமகேஸ்வரி, ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

வாழ்க்கை மனித மதிப்புகளால் மாண்புறுகிறது; அனைவரும் அன்பும் அமைதியும் மிகுந்த சூழலில் வாழ்வதற்கு மனித மதிப்புகளைப் பேணுகிற உயர்மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். அன்பு, சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்பு முதலான மதிப்புகளை மாணவர்கள் தங்களது வீட்டிலும்,வகுப்பறையிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும் நிறைந்த இயந்திர உலகின் அன்றாட வாழ்வியலில் நம்மால் கடைப்பிடிக்கப்பெறுகிற மனித மதிப்புகளே நம்மைப் பாதுகாப்பு உணர்வுடன் வாழச்செய்வன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பூம்பொழில் உரையரங்கில் துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி தலைமை உரையாற்றினார். ‘ஓசை’ சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர், காளிதாசன், ‘மணி நீரும் அணி நி நிழற்காடும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, அடர்ந்த காடுகளின் பசுமையான புல்வெளிகள் இயற்கையின் சிறு அணை தடுப்புகளாகச் செயலாற்றி மலை பகுதிகளில் சிற்றாறுகளை உருவாக்குகின்றன. அதனால் காடுகளைப் பாதுகாப்பதிலும், இயற்கையைப் பேணுவதிலும் மாணவர்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும்.

சுற்றுச்சூழலில் அனைத்து வகையான பறவையும் விலங்கும் பாதுகாப்புடன் வாழ உரிமை பெற்றுள்ளன. அவற்றின் நிலைப்பே சூழலியலின் சமநிலைப் பாதுகாப்புக்குஅடிப்படை. ஒவ்வொரு மாணவரும் காடுகள், மரங்கள் முதலான இயற்கை வளங்களைப் பேணுவதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் தன்னார்வத்தால் இயற்கை பாதுகாக்கப்பெற்றால் மட்டுமே பூமியானது, எதிர்கால சந்ததியினரும் வாழ்வதற்கு தகுதியுடையதாக திகழும். அவ்வகையில் மனித வாழ்க்கைக்கு அடிப்படையான நீரையும், நிலத்தையும், இயற்கை உயிர்களையும் பாதுகாப்பதற்கு மாணவர்கள் உறுதிகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...