உடுமலையில் ‘மடிப்பு நுண்ணோக்கி’ பயிற்சி பட்டறை - ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

உடுமலை அடுத்த அமராவதி நகரில் உள்ள விவேகானந்தா சைனிக் அகாடமியில் நடைபெற்ற ‘மடிப்பு நுண்ணோக்கி’ பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சியும், விளக்கமும் அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி பட்டறையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

உடுமலை அடுத்த அமராவதி நகர் செயல்பட்டு வரும் விவேகானந்தா சைனிக் அகாடமியில் மடிப்பு நுண்ணோக்கி குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், மதுரை ஈடன் அறிவியல் கழகம் மற்றும் உடுமலை எண்ணம் போல் அறக்கட்டளை சார்பில் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.



இந்த பயிற்சி பட்டறையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். விவேகானந்தா சைனிக் அகாடமியின் நிறுவனர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி துரைசாமி தலைமை வகித்தார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர். நெல்சன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவேகானந்தா வித்யாலயம் பள்ளியின் தாளாளர் மூர்த்தி பேசுகையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுவதன் நோக்கம் உங்களது திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. உற்று நோக்கும் திறனையும், ஆராய்ச்சி துறையில் உங்களை ஈடுபடுத்துவதற்காகவும் இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன, என்றார்.

மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொச்சி கப்பற்படையில் பணியாற்றும் லெப்டினன்ட் அவந்திகா பேசுகையில், "பெண்களும் ராணுவ பயிற்சிகளில் சேர முடியும். குறிப்பாக கப்பற்படையில் சேர்ந்து பணியாற்ற முடியும். அதில் உள்ள வாய்ப்புகள் அதிகம். அதற்கு கல்லூரி மாணவிகள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்த மடிப்பு நுண்ணோக்கி பயிற்சியை நடத்திய கருத்தாளர் மதுரை மொ. பாண்டியராஜன், மடிப்பு நுண்ணோக்கி குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மடிப்பு நுண்ணோக்கிகள் செய்வதற்கான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு, அனைவரும் மடிப்பு நுண்ணோக்கிகளை செய்து முடித்தனர்.



அதனைத் தொடர்ந்து தாவரங்கள், ஒரு செல் உயிரிகள், பாக்டீரியாக்கள், ஆல்காக்கள், பாசிகள் போன்ற நுண்ணுயிரிகளை எவ்வாறு சேகரிப்பது, அவற்றை எவ்வாறு மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தி படம் பிடிப்பது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளித்தார்.



இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு வருட காலம் தங்களது மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தி செயல்திட்டம் தயாரிக்க வேண்டும் என்றும், ஒரு வருடம் முடிவில் அவர்களுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் மூலம் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதனிடையே உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மணி, பயிற்சி முகாமில் முழுமையாக கலந்து கொண்டு மிகச்சிறப்பாக மடிப்பு நுண்ணோக்கிகளை செய்த மாணவிகளிடம், இதுபோன்ற பயிற்சிகள் உங்களது திறமைகளையும் அறிவியல் துறையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிருந்தா வாழ்த்துரை வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான் செய்திருந்தார்.



இந்த நிகழ்வில் கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள் ஹரிணி, மது ஸ்ரீ உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...