இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக குழுவினர் கோவை குமரகுரு கல்வி குழுமத்தில் ஆய்வு - கூட்டுத் திட்டங்கள் குறித்து விவாதம்

இஸ்ரேலின் டெல்அவிவ் பல்கலைக்கழக தலைவர் ஏரியல் போராட் தலைமையிலான உயர் ஆய்வுக்குழுவினர் குமரகுரு கல்வி நிறுவனங்களோடு கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக அறிக்கை.


கோவை: இஸ்ரேல் நாட்டின் அவிவ் பல்கலைக்கழக குழுவினர் குமரகுரு கல்வி குழுமத்தில் ஆய்வு செய்து இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக குமரகுரு கல்வி குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குமரகுரு கல்வி குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏரியல் போராட் தலைமையிலான உயர் ஆய்வுக்குழு குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களை விவாதிப்பதற்காக வருகை தந்தது.

குழுவின் தலைவர் ஏரியல் போராட்டுடன் அந்த பல்கலைக்கழகத்தின் ஆசியநாடுகளுடனான செயல்பாடுகள் திட்டமிடுகை இயக்குநர் கான்ஸ்டாண்டின் பிளட்டோனேவ், பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கான துணைத் தலைவர் பேரா.மிலெட் சமீர், இந்தியா ஆல்பா கேபிடல் அமைப்பின் இணை நிறுவனர் கேரி சுஸ்மான் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.



இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழக குழுவினரை குமரகுரு கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சரவணன், குமரகுரு பன்முக கல்லூரியின் முதல்வர் டாக்டர் விஜிலா எட்வின் கென்னடி ஆகியோர் வரவேற்று திட்டங்களை விவாதித்தனர்.

அப்போது, குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் பல தளங்களில் இணைந்து வேலை செய்ய முடியும் என்பது விவாதிக்கப்பட்டது. அத்துடன் புதுமையான கற்றல் முறைகளை ஊக்குவித்தல், தொழில் முனைவோர் பங்கேற்பை விரைவு படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்திட்டங்கள் உருவெடுத்தன.



இதனைதொடர்ந்து, மாலையில் நடந்த நிகழ்வொன்றில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் உயிரி தொழில்நுட்ப பிரிவில் நுண்ணோக்கியில் சிறந்து விளங்கும் ஆய்வு மையத்தை பேரா. போராட் திறந்து வைத்தார்.

இந்த மையம் இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இயங்கும் உயராய்வு மையம். அதிநவீன உயிரியல் பிம்பங்கள் உருவாக்க வசதிகொண்ட அந்த மையம், உயிரியல் கணக்கீடுகளை இணைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டதாக விளங்குகிறது.

கோயம்புத்தூர் பகுதியில் உயிரி - பிம்ப ஆராய்ச்சிகளுக்கான மையங்களில் இதுவே முதன்மையானது. அங்கு ஜெர்மனியைத் தளமாகக்கொண்ட புகழ்பெற்ற நுண்ணோக்கி உற்பத்தியாளர் கார்ல் ஜெய்ஸ் வழங்கிய தலைகீழ் வைட்ஃபீல்ட் எபிஃப்ளோரசன்ஸ் நுண்ணோக்கி பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து டெல் அவிவ் பல்கலைக்கழகக் குழுவினர், குமரகுருவின் போலச் செய்யும் ஆய்வுச் (Forge) சாலையையும் பார்வையிட்டனர். அங்கு செயல்படும் தற்போதைய ஆய்வுத் திட்டங்களும் எதிர்கால திட்டங்களும் அவர்களுக்கு விளக்கப்பட்டன. அதற்கு முன்னதாகக் குமரகுரு கல்லூரியில் இயங்கும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்தைப் பார்வையிட்டனர்.



இதனையடுத்து அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தொல்லியல் சான்றுகளையும் கல்வெட்டுகளையும் விரும்பிப் பார்த்தனர். அப்போது தென்னிந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களையும் வரலாற்றுச் சான்றுகளையும் விளக்கிக் கூறியதோடு தமிழ் மொழியின் பழமையையும் செவ்வியல் இலக்கியங்களின் சிறப்புகளையும் விவரித்து கூறியபோது அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...