சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை கௌரவித்த குமரகுரு கல்வி நிர்வாகம்

குமரகுரு கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 110 பேரை தேர்ந்தெடுத்து விருது மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த குமரகுரு கல்வி நிர்வாகம்.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கே-ஹானர்ஸ் நிகழ்வில் 110 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக குமரகுரு கல்வி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை பாராட்டும் கே-ஹானர்ஸ் நிகழ்வு கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது.



குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 110 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.



குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றுவோரில் 75 பணியாளர்களும், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றுவோரில் 18 பணியாளர்களும், குமரகுரு வேளாண்மைக்கல்லூரியில் பணியாற்றுவோரில் 17 பணியாளர்களும் பாராட்டுக்கு உரியவர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.



இதற்கென நடைபெற்ற விழாவில் கோவை நகரின் புகழ்பெற்ற ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்கள் & சந்திரா குழுமங்கள் ஆகியவற்றின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் நந்தினி ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையில் நடந்த விழாவில் கல்லூரி குமரகுரு கல்லூரிகளின் தாளாளர் எம். பாலசுப்பிரமணியம், இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் ஆகியோர் பங்கு பெற்று பணியாளர்களை வாழ்த்திப் பேசினர்.

விருதுகள் வழங்கும் விழாவின் டாக்டர் நந்தினி ரங்கசாமி பேசியதாவது, ஒரு கல்வி நிறுவனம் உள்முக திறனுடன் கூடிய நோக்கமும் பார்வையும் கொண்டு வளர்த்து எடுக்கப்படும் போது உருவாகும் வளர்ச்சி அந்நிறுவனத்திற்கு மட்டும் உரியதாக இல்லாமல் அந்நிறுவனம் செயல்படும் சமூகத்திற்கும் உரியதாக மாறிவிடும்.

அதன் தொடர்ச்சியே சிறந்த உலகத்தைக் கட்டமைக்கும் பணியாக மாறுகிறது. சமூகத்தின் தலைவிதியை வடிவமைக்கும் பொறுப்பு நிறுவனத்தை நடத்துபவர்களின் தோள்களில் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படும் நிர்வாகத்தை இங்கே பார்க்கிறேன்.

பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது ஆசிரியர்களுக்கு அவசியமான ஒன்று. இந்தத் தலைமுறை மாணாக்கர்கள் வித்தியாசமாகச் சிந்திக்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்களின் சிந்தனையின் மூலம் எழுப்பும் வினாக்களுக்கான விடைகளைத் தரும் ஆசிரியர்களே இப்போதைய தேவை.

மாணவர்களை எதிர்கொள்ளும் நடைமுறை அறிவுடன் கூடிய ஆசிரியர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் மூளை எப்படிச் சிந்திக்கும் என்பதை உணர்ந்து பாடங்களைத் தேர்வு செய்து வழங்கும் ஆசிரியர்களின் அணுகுமுறை மாணவர்களை ஈர்க்கும் என்பதோடு விமரிசன பார்வையை வளர்த்தெடுக்கும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைமையுரையாற்றிய குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர், ஒவ்வொரு ஆசிரியரும் தாங்கள் செய்த பணிகள் குறித்து தாங்களே மகிழ்ச்சி அடைய வேண்டும். அதற்கு அவர்கள் மகிழ்ச்சி அடையத்தக்க பணிகளைச் செய்தவர்களாக இருக்க வேண்டும்.

அத்தோடு கல்வித்துறையில் உருவாகி வரும் புதிய புதிய சவால்களை உணர்ந்தவர்களாக விளங்குவதோடு, அவரவருக்கான சவால்களை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். கடினமான உழைப்பின் மூலம் அச்சவால்களில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசிய குமரகுரு நிறுவனங்களின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர், பணியிடங்களில் ஒருவரையொருவர் ஊக்குவிக்கும் வகையில் புதிய யோசனைகளை முன்வைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

நமது கல்வி வளாகம் எதிர்காலத்தை நோக்கிய கவனம் கொண்ட சுற்றுச் சூழல் அமைப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. அதற்கு அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களும், பணியாளர்களும் தேவை. அந்த தேவையை உணர்ந்து நாம் செயல்பட்டால் அத்தகைய எதிர்காலம் தானாகவே உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.





Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...