கோவை கற்பகம்‌ உயர்கல்விக் கழகத்தில்‌ மகாகவி பாரதியார்‌ நினைவு நாள்‌ அனுசரிப்பு விழா..!

மகாகவி பாரதியார்‌ நினைவு நாளையொட்டி, கற்பகம்‌ உயர்கல்விக் கழகத்தில்‌ கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை கற்பகம்‌ உயர் கல்விக்கழகத்தில்‌ மகாகவி பாரதியாரின் நினைவு நாள் அனுசரிப்பு விழா நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளரும், கவிஞருமான மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பொள்ளாச்சி சாலையில் உள்ள கற்பகம்‌ உயர்கல்விக்கழகத்தில்‌ கடந்த 12ஆம் தேதி பாரதியாரின் நினைவு நாள்‌ விழா அனுசரிக்கப்பட்டது.

இந்த விழாவில்‌, துணைவேந்தர்‌ முனைவர்‌ ப. வேங்கடாசலபதி தலைமையுரையாற்றினார்‌. பாரதியாரின்‌ சிந்தனைகளைப்‌ பின்பற்றி மாணவர்கள்‌ தமது கல்விக்கு நற்பண்புகளாலும்‌, நன்னடத்தையாலும்‌ புகழ்‌ சேர்க்க வேண்டும்‌ என்று அறிவுறுத்தினார்‌.

விழாவில்‌ வாழ்த்துரை வழங்கிய மாணவர்‌ நலன்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ப. தமிழரசி, பாரதியின்‌ பன்முக ஆளுமைகளையும்‌, அதன்‌ வழியே மாணவர்‌ அடைய இயலும்‌ முன்னேற்றத்தையும்‌ எடுத்துரைத்தார்‌. விடுதலை உணர்வும்‌, நாட்டுப்பற்றும்‌ மிக்க மகாகவி பாரதியாரைப்‌ பின்பற்றினால்‌, “எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்க இயலும்‌” என்று கூறினார்‌.

இதேபோல், விழாவில்‌ கோவை குமரகுரு கலை அறிவியல்‌ கல்லூரியின்‌ தமிழ்த்துறைப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ அ. ராமசாமி, “இந்தியா உலகிற்கு அளிக்கும்‌” என்னும்‌ தலைப்பில்‌ சிறப்புரை வழங்கினார்‌. பாரதியாரின்‌ சிந்தனைகள்‌ ஒட்டு மொத்த மானுட குலத்திற்கான சிந்தனையாக உயர்ந்து நிற்கும்‌ பேற்றினையும்‌, உலக நாடுகளில்‌ பாரதியாரின்‌ சிந்தனைகள்‌ ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும்‌, பல மொழிகளைக்‌ கற்க வேண்டிய அவசியத்தையும்‌ எடுத்துரைத்தார்‌.

தமிழ்மொழியின்‌ சிறப்பினை பாரதியார்‌ போற்றிய திறத்தை எடுத்துரைத்ததுடன்‌, வேற்று மொழி இலக்கியச்‌ செல்வங்களைத்‌ தமிழுக்குக்‌ கொண்டுவர வேண்டியதன்‌ தேவையையும்‌, அதனைக்‌ குறித்த பாரதியாரின்‌ சிந்தனைகளையும்‌ மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்‌.

பாரதியாரின்‌ நினைவு நாளை ஒட்டி கற்பகம்‌ உயர்கல்விக்கழக மாணவர்களுக்கும்‌, பிற பல்கலைக்கழக மாணவர்களுக்குமாக தனித்தனியாக போட்டிகள்‌ நிகழ்த்தப்பெற்று பரிசுகளும்‌, சுழற்கேடயமும்‌ வழங்கப்பட்டன.



மாநில அளவில்‌ நடைபெற்ற பேச்சுப்போட்டியில்‌ மதுரை, தியாகராசர்‌ கல்லாரி மாணவர்‌, செ. பாலு ஆனந்த்‌ முதல்‌ பரிசையும்‌, கோவை கொங்குநாடு கலை அறிவியல்‌ கல்லாரி மாணவர்‌ வி. கெளரிசங்கர்‌ இரண்டாம்‌ பரிசையும், கோவை சட்டக்கல்லூரி மாணவி கு.சுமித்ரா மூன்றாம்‌ பரிசையும்‌ வென்றனர்‌.



உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள்‌ ஈ.ஹரிஹரதேவி, மா.வசந்தகுமார்‌ ஆகியோர்‌ அதிகப்‌ புள்ளிகளைப்‌ பெற்று சுழற்கேடயமும்‌ பெற்றனர்‌.

முதலாமாண்டு மாணவி‌ தர்ஷினியின்‌ வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த விழாவானது, மாணவர் ஹரிஷின்‌ நன்றியுரையுடனும்‌ விழா நிறைவுபெற்றது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...