கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் காமராசர் பிறந்த நாளையொட்டி சிறப்பு சொற்பொழிவு..!

கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிற இந்நாளில், மாணவர்கள் தமது கல்விக்கு நற்பண்புகளாலும், நன்னடத்தையாலும் மாண்பு சேர்க்க வேண்டும் என்று விழாவில் துணைவேந்தர் அறிவுறுத்தினார்.


கோவை: கற்பகம் பல்கலைக்கழகத்தில் காமராசர் பிறந்த நாளையொட்டி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் துணைவேந்தர் முனைவர் ப.வேங்கடாசலபதி தலைமை உரையாற்றினார்.

கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிற இந்நாளில், மாணவர்கள் தமது கல்விக்கு நற்பண்புகளாலும், நன்னடத்தையாலும் மாண்பு சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விழாவில் வாழ்த்துரை வழங்கிய மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப.தமிழரசி, காமராசரின் பன்முக ஆளுமைகளையும், அதன் வழியே தமிழகம் பெற்ற முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தார். பசி நீங்கிய மாணவர்களாலேயே பாடம் கேட்க முடியும்; அதனால் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அவசியம் என்ற நிலையில் காமராசர் முன்னெடுத்த திட்டங்களை குறித்து விளக்கினார்.

விழாவில் நாமக்கல் தமிழ்ச்சங்கச் செயலர் ‘நற்றமிழ் நாவரசு’ முனைவர் கோ. நாராயணமூர்த்தி, ‘காலத்தை வென்ற காமராசர்’ என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.



பெருந்தலைவர் பாரத ரத்னா காமராசர், தன்னலமற்ற தலைவர்; பாமரருக்கும் கல்விக்கண் திறந்தவர்; ‘எளிமை; முற்போக்குச் சிந்தனை, சிறந்த செயல்திட்டம்; ஓயாத உழைப்பு’ ஆகியவையே காமராசரது அணுகுமுறைகள்; கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தமிழக மாணவர்கள் நிறைவாகப் பெற்று உயர்வதற்கு, அவர் கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கிய மறுமலர்ச்சிச் சிந்தனையை எடுத்துரைத்தார்.

கல்வி வளர்ச்சியுடன் சுயசார்பு நிலையில் தொழில் வளர்ச்சியும் இணைந்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், நிலக்கரி ஆலை, சர்க்கரை ஆலை என பலவகைத் தொழில் நிறுவனங்களையும் உருவாக்கிய நிலைகளைச் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக, தொழிற்சாலைகள் முதலாக சாலை போக்குவரத்து வரையிலான கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்தி, தமிழகத்தை முன்னேற்றிய ஆட்சித் திறத்தைக் குறிப்பிட்டார். தமக்கென்று சொத்து சேர்க்காத மக்கள் முதல்வராகவும், இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங்மேக்கராகவும் விளங்கிய அவர், ‘கருப்பு காந்தி’ என்று போற்றப்பட்ட சிறப்பினை எடுத்துரைத்தார்.



படிக்காத மேதை என்றாலும், பட்டறிவால் தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்; ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வாய்ப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஷிப்ட் முறையிலும் கல்லூரி வகுப்புகளை நடத்த ஆணையிட்டார்.

தமது ஆட்சியில் கல்வித்துறைக்கென நானூறு கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கினார். பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் முதலான முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தினார். நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் புரட்சிமிக்க சிந்தனைகளோடு, கல்வி வழியான ஆளுமைத் திறன் மேம்பாடும் அவசியம் என்பதை நாட்டின் கல்வித் திட்டம் உறுதிசெய்ய வேண்டும்; அத்தகைய தரமான கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று காமராசர் புதிய திட்டங்கள் பலவற்றை வகுத்தார்; அவரது சிந்தனைகள், இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு என்றும் ஆக்கம் சேர்ப்பதை அவர் விளக்கி உரைத்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...