கோவை கற்பகம்‌ உயர் கல்விக்கழகத்தில்‌ 12வது பட்டமளிப்பு விழா..!

113 முனைவர்‌ பட்ட ஆய்வாளர்களும்‌, தங்கப்பதக்கம்‌ வென்ற 44 இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணவர்களும்‌ பட்டமளிப்பு விழாவில்‌ நேரில்‌ கலந்துகொண்டு பட்டங்களைப்‌ பெற்றனர்‌.


கோவை: கோவை கற்பகம்‌ உயர் கல்விக்கழகத்தில்‌ 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கற்பகம்‌ உயர் கல்விக்கழகத்தில்‌ 12ம்‌ பட்டமளிப்பு விழாவானது, 23.03.2022 புதனன்று நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில்‌ 2221-மாணவர்கள்‌ பட்டம்‌ பெறத்‌தகுதி பெற்றிருந்தனர்‌.



அவர்களுள்‌ 113 முனைவர்‌ பட்ட ஆய்வாளர்களும்‌, தங்கப்பதக்கம்‌ வென்ற 44 இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணவர்களும்‌ பட்டமளிப்பு விழாவில்‌ நேரில்‌ கலந்துகொண்டு பட்டங்களைப்‌ பெற்றனர்‌.

பெங்களூரு இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின்‌ மேனாள்‌ செயலரும்‌, திருவனந்தபுரம்‌ விக்ரம்‌ சாராபாய்‌ விண்வெளி ஆய்வுமையத்தின்‌ மதிப்புறு பேராசிரியருமாகிய டாக்டர்‌ கைலாசவடிவு சிவன்‌ அவர்கள்‌ விழாவில்‌ சிறப்புவிருந்தினராகக்‌ கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்‌.



அவர்தம்‌ உரையில்‌, வாய்ப்புகள்‌ பலவற்றிலும்‌ சிறந்தவற்றைத்‌ தேர்ந்தெடுத்து, இதுவே, 'வாழ்க்கை' என்று கட்டமைத்துக்கொள்கின்ற சுதந்திரமானது அனைத்து மாணவருக்கும்‌ அமைவதில்லை; மாறாக, கிடைக்கின்ற வாய்ப்புகளைச்‌ சிறப்பாகப்‌ பயன்படுத்திக்கொள்கிற நேர்மறை மனப்பான்மையே அவர்களுக்குச்‌ சிறந்த வாழ்க்கையைத்‌ தருகிறது என்றார்‌.

மாணவர்கள்‌, தன்னலமின்றி நாட்டுக்கும்‌, உலகுக்கும்‌ பயன்சேர்ப்பதைத்‌ தமது வாழ்க்கையின்‌ பேரிலக்காகக்‌ கொள்ளவேண்டும்‌; பரந்துபட்ட நோக்கிலான அம்முயற்சிக்குத்‌ தடையாகவுள்ள தாழ்வுமனப்பான்மையை அவர்கள்‌ விட்டொழிக்கவேண்டும்‌; சிக்கல்களை வெற்றிக்கான வாய்ப்புகளாக்கிக்‌ கொள்வதற்கு, இலக்கை முறையாகத்‌ திட்டமிடவேண்டும்‌; குறையாத ஆர்வத்துடன்‌ புதியவற்றைக்‌ கண்டறிய வேண்டும்‌; அத்தகைய முயற்சிக்கு வலிமை சேர்க்கின்ற நுண்கற்றல்‌ செயல்முறையைத்‌ தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்‌; தோல்வி அச்சத்தை நீக்கி தொடர்ந்து உழைத்தால்‌ மட்டுமே வெற்றி என்பதை உறுதியாக நம்பவேண்டும்‌' என்று வலியுறுத்தினார்‌.



இளைஞர்கள்‌ எதிர்காலத்தில்‌ சவால்கள்‌ நிறைந்த புதிய உலகை எதிர்கொள்ள உள்ளனர்‌; அவர்களுக்குப்‌ புதிய சவால்களே, அனுபவப்‌ பாடங்களாகின்றன. அதனால்‌ இளைஞர்கள்‌ சவால்களைச்‌ சாதனைகளாக்கத்‌ தேவையான திறன்களைத்‌ தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்‌' என்ற தன்னம்பிக்கைச்‌ சிந்தனையை அறிவுறுத்தினார்‌.

இந்தியப்‌ பிரதமரின் சீரிய முயற்சிகளால்‌, விண்வெளி ஆய்வுத்துறையில்‌ இந்திய அரசு பெற்றுள்ள ஆக்கங்களை அவர்‌ பட்டியலிட்டார்‌. இன்று ராக்கெட்டுகள்‌ உருவாக்கம்‌ மற்றும்‌ விண்கலன்களை ஏவுதல்‌ முதலான பணிகளில்‌ தனியார்‌ அமைப்புகள்‌ மற்றும்‌ கல்விநிலையங்களின்‌ குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்‌. 'ஆஷாதி கா மகோத்ஸவ்‌' என்பதன்‌ ஒருபகுதியாக, இந்திய வான்‌ ஆய்வுமையத்தின்‌ துணையுடன்‌, இந்தியத்‌ தொழில்நுட்பவியல்‌ கூட்டமைப்பின்‌ வழியே மாணவர்கள்‌ உருவாக்கவுள்ள எழுபத்தைந்து செயற்கைக்கோள்கள்‌ விண்ணில்‌ ஏவப்பட உள்ளதைக்‌ குறிப்பிட்டார்‌.



இப்பணியில்‌ கற்பகம்‌ உயர்கல்விக்கழகத்தின்‌ சிறந்த பங்களிப்பையும்‌ எண்ணி மகிழ்வதாகக்‌ கூறினார்‌. இக்கல்விநிறுவன மாணவர்களின்‌ ஆய்வுசார்‌ பங்களிப்பும்‌, கல்வி மேம்பாடும்‌ சமுதாயத்துக்கு மேலும்‌ பயன்‌ சேர்க்கவேண்டும்‌ என வாழ்த்தி, பட்டமளிப்பு விழா பேருரையினை நிறைவுசெய்தார்‌.

முன்னதாக, கற்பகம்‌ உயர்கல்விக்கழகத்தின்‌ வேந்தர்‌ வி.கிருஷ்ணகுமார்‌ பட்டமளிப்பு விழாவினைத்‌ தொடங்கிவைத்தார்‌. விழாவில்‌ கற்பகம்‌ உயர்கல்விக்கழகத்தின்‌ தலைவர்‌ டாக்டர்‌ இராச. வசந்தகுமார்‌ அவர்களும்‌, கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ முதன்மைச்‌ செயல்‌ அலுவலர்‌ க. முருகையா அவர்களும்‌ முன்னிலை வகித்தனர்‌.

கற்பகம்‌ உயர்கல்விக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ சேது சுடலைமுத்து 2021-2022-ஆம்‌ ஆண்டறிக்கையினை வாசித்தார்‌. பதிவாளர்‌, புல முதன்மையர்கள்‌, துறைத்தலைவர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்கள்‌ பட்டமளிப்பு விழாவில்‌ கலந்துகொண்டு சிறப்பித்தனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...