வஜ்ரா சமூக நல அறக்கட்டளையின் மூலம் வீடற்ற மற்றும் ஆதரவற்ற நாய்கள் எண்ணிக்கையை தகுந்த கைப்பேசி செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் வஜ்ரா சமூக நல அறக்கட்டளையின் மூலம் மாநகராட்சி பகுதிகளில் உலாவி வரும் வீடற்ற மற்றும் ஆதரவற்ற நாய்களின் எண்ணிக்கையை தகுந்த கைப்பேசி செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது,

"மாநகராட்சியுடன் இணைந்து வஜ்ரா சமூக நல அறக்கட்டளையின் இலாப நோக்கமற்ற முயற்சியாக கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் உலாவி வரும் வீடற்ற நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்கும், அவைகளுக்கு நல்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தற்போது கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கப்பட்டுள்ளது.

மேற்படி கணக்கெடுப்பு பணியில் நாய்களின் எண்ணிக்கை மேலாண்மை, தொற்று நோய்கள் மேலாண்மை மற்றும் தெரு நாய்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்த தரவுகள் எடுத்தல் போன்ற பணிகளும் உள்ளடங்கும். மேலும் இப்பணிக்கு கோவாவை மைய தளமாக கொண்டு இயங்கும் உலகளாவிய கால்நடை சேவைகள் பணிக்குழு உரிய தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்".என்று தெரிவித்தார்.
இந்த முயற்சி குறித்து கோயம்புத்தூர் தெரு நாய்களின் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன் கூறும் போது,
"இந்த முயற்சியின் மூலம் கோவையைத் தெரு நாய்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதே எங்கள் அமைப்பின் நோக்கம். இந்த திட்டத்தினை விரிவுபடுத்தவும், நகரின் அனைத்து பகுதிகளிலும் நாய்களை பராமரிக்கவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால்சுன்கரா ஆதரவுடன் இந்த திட்டம் பரிச்சார்ந்த முறையில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டு இனி வரும் காலங்களில் மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் விரிவுபடுத்தப்படும்.

மேலும் இந்த கணக்கெடுப்பு மே 21, 2022 காலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 7-8 நாட்களுக்கு 20 - 25 தன்னார்வலர்களுடன் இரு சக்கர வாகனங்களின் மூலம் பயணம் செய்து பார்வையிட்டு உரிய தரவுகள் சேகரிக்கும் பணி நடைபெறும்.
உலகளாவிய கால்நடை சேவைகள் பணிக்குழு தெரு நாய்களின் எண்ணிக்கை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நிதியுதவி அளிக்கிறது. இதில் நாய்களுக்கு பயிற்சி, தன்னார்வ ஈடுபாடு, கணக்கெடுப்பு செயல்படுத்தல், தரவு பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடல் ஆகியவை அடங்கும்.
இந்நிகழ்வில்துணை மேயர் வெற்றி செல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையாளர் மாரி செல்வி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், உயிரியல் பூங்கா இயக்குனர் மருத்துவர் செந்தில் நாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.