கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "பொருநை” அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனைகள் ஓவியக் கண்காட்சியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "பொருநை” அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனைகள் ஓவியக் கண்காட்சியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் தொல்லியல் துறை சார்பில் “கீழடி” வைகை நதிக்கரையில் நகர நாகரிகம், “பொருநை” ஆற்றங்கரை நாகரிகம், “கொடுமணல்” சங்ககாலத் தொழிற்கூடம், “மயிலாடும்பாறை” 4200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலப்பண்பாடு ஆகிய தொல்பொருட்கள் கண்காட்சியும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியும் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 190 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 எனக்கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் உள்ளது.
எனவே தொன்மையான சமூகத்தின் நாகரிகத்தினை பறை சாற்றும் அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புகளை காண பொதுமக்கள், தமிழ்பற்றாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் திரளாக பார்வையிட்டு வருகின்றனர். இக்கண்காட்சியானது, இன்று முதல் வரும் 25ம் தேதி வரை 7 நாட்கள் தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் பார்வைக்கு திறந்து இருக்கும்.
இந்நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் எம்.எல்.ஏநா.கார்த்திக் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்களும் என பலர் கலந்து கொண்டனர்.