பல்லடம் அருகே ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து 5-பவுன் நகை, 2-லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து 5-பவுன் நகை, 2-லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம்சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். செட்டிபாளையம் சாலையில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் கீழே இரண்டு அறைகளும், மேலே இரண்டு அறைகளும் உள்ளன. எப்பொழுதும் இரவு உணவு முடித்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் உறங்குவதற்காக மேலே சென்று விடுவார்கள்.
நேற்று இரவு வழக்கம் போல இரவு உணவு முடித்துவிட்டு உறங்குவதற்காக மேலே சென்று விட்டனர். கீழ் அறையில் உள்ள பீரோக்களின் சாவியை எப்பொழுதும் பீரோவிலேயே வைத்திருப்பார்கள்.
இந்நிலையில் நள்ளிரவு பூஜை அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சாவியை கொண்டு பீரோவைத் திறந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, வீட்டின் முன்புற கதவிலிருந்த சாவியை கொண்டு கதவை திறந்து முன்புற கதவு வழியாக வெளியே சென்றுள்ளனர்.
அதிகாலை கீழே இறங்கி வந்து பார்த்த முருகேசன் வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளில் அலாரம் பொருத்தியுள்ள முருகேசன் அதற்குண்டான வேலைகளை முழுமையாக முடிக்காததால் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.