குறுந்தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்து தரவும், நமது நாட்டில் குறுந்தொழில்களுக்கு தனி வாரியம் அமைத்திடவும், மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு TACT-கோவை மாவட்டம் சார்பாக கடிதம் எழுதியுள்ளனர்.
கோவை: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் TACT-கோவை மாவட்டம் சார்பாக, கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் TACT கோவை மாவட்டம் சார்பாக தலைவர் ஜேம்ஸ், பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கள் துறை சார்ந்த அமைச்சரான தங்களுக்கு கோவை மாவட்ட குறுந்தொழில் அமைப்பான TACT சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறோம்.
தங்களை நேரில் சந்தித்ததில் பெரும் மகிழச்சி அடைகிறோம். குறுந்தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தங்கள் தீர்த்து தரவும் நமது நாட்டில் குறுந்தொழில்களுக்கு தனி வாரியம் அமைத்திடவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் எவ்விதமான உதவிகளும் கிடைக்க பெறாமல் உள்ள ஜாப்ஆடர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோர்களுக்கு தங்கள் உதவிட வேண்டும். அதேபோல் GST யில் உள்ள பிரச்சனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தங்கள் உரிய துறை சார்ந்த அமைச்சர் அவர்களிடம் எடுத்துறைத்து குறைகளை நீக்கிட வேண்டுகிறோம்.
கீழ்கண்ட எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தந்திட வேண்டுகிறோம்
1. குறுந்தொழில் நலவாரியம் அமைத்திட கோரி
நமது நாட்டில் பெரும் வேலைவாய்ப்புகள் வழங்கி வரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கான தனி நல வாரியம் அமைத்து தொழில் முனைவோர்களும் அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகளும் பயன்பெறச் செய்திட கோருகிறோம்.
2. குறுந்தொழில் கடன் திட்டம்
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று மற்றும் ஆடர்கள் இல்லாமல் குறுந்தொழில்கள் மிகவும் நசிந்து கொண்டு வருகிறது. அரசு கொரோனா காலத்தில் அறிவித்த கடன் திட்டத்தில் கடன் பெறாத தொழில் முனைவோர்களுக்கும் எவ்விதமான கடன் உதவி கிடைக்கவில்லை. தங்கள் குறுந்தொழில் முனைவோர்களுக்கு எவ்விதமான நிபந்தனைகளும் இல்லாமல் (சிபில் பார்க்காமல்) குறைந்த வட்டியில் ஒரு ஆண்டுக்குத் திருப்பி செலுத்தக் கால அவகாசம் வழங்கி 5 லட்சம் வரை கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
3. ஜாப் ஆடர்கள் பொது துறையில் இருந்து பெற்று தர கோரி
அரசு குறுந்தொழில் முனைவோர்களுக்கு 25 % சதவீதம் ஆடர்களை இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்து பல ஆண்டுகள் ஆகியும், இது வரை ஜாப்ஆடர்கள் மற்றும் உதிரி பாகங்கள் செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஆடர்கள் கிடைப்பது இல்லை தங்கள் குறுந்தொழில்களுக்கு ஆடர்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
4.GST 5 % சதமாக ஜாப்ஆடர்களுக்கு கோரி
நமது நாட்டில் GSTஅமுலாகத்துக்கு முன்பு ஜாப்ஆடர்கள் செய்து கொடுக்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு அரசு 2 % சதவீதம் TDS மாத்திரம் பிடித்தம் செய்து வந்தது, GST அமுலாகத்துக்கு பிறகு ஜாப்ஆடர்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் 12 % சதவீதமாக GST பிடித்தம் செய்வதிலிருந்து 5 % சதவீதமாக குறைத்திட வேண்டுகிறோம்.
5. GST கான அபராத வட்டி தள்ளுபடி செய்திட கோரி
GST அமுலாகத்துக்கு பிறகு 2017-ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு ஆகஸ்ட் வரை GST காலதாமதமாகச் செலுத்திய தொழில் முனைவோர்களுக்கு 18-சதவீதம் அபராத வட்டியுடன் செலுத்த சொல்லி நெருக்கடி கொடுத்து வருகின்றார்கள். தொழில் பாதிப்பில் உள்ள தொழில் முனைவோர்களைப் பாதுகாக்க அபராத வட்டி தள்ளுபடி செய்திட கோருகிறோம்.
6. கடன்களை திருப்பி செலுத்தக் கால அவகாசமும், வட்டி தள்ளுபடியும் கோரி
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தித் துறையில் உள்ள குறு சிறு தொழில் முனைவோர்கள் ஆடர்கள் இல்லாமல் தொழில் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள் கொரோனாவுக்கு பின் மிகவும் மோசமாகத் தொழில் நிலை உள்ளதால் வங்கியில், தொழில் முனைவோர்கள் வாங்கி உள்ள தொழில் சார்ந்த அனைத்து கடனும் திருப்பி செலுத்த ஒரு ஆண்டுக் காலம் அவகாசம் வழங்கிவருவதுடன் வரும் ஒரு ஆண்டுக்கான வட்டிகள், அபராத வட்டிகள் தள்ளுபடி செய்திட கோருகிறோம்.
7. நாடு முழுமையும் தொழில் நகரங்களில் தொழில் பேட்டை கோரி
பன்முகம் கொண்ட நமது நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களும் தனித் தன்மை சார்ந்த தொழில் நகரங்களாக இருந்து வருகிறது. தொழில் நகரங்களில் அந்த அந்த தொழில்களுக்கு தக்கபடி தொழில் பேட்டைகள் குறிப்பாகக் குறுந்தொழில் பேட்டைகளை அரசு உருவாக்கித் தர வேண்டுகிறோம்.
8. விலை நிர்ணயம் கமிட்டி கோரி
தொழில் துறை சார்ந்த மூலப்பொருள்களின் விலை எவ்விதமான முகாந்தரமும் இல்லாமல் ஒரு ஆண்டில் பல மடங்கு உயர்த்தியதால் தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி குறு சிறு தொழில்கள் முடங்கி கிடக்கிறது. தொழில்துறை ஷேர்மார்கெட்டு போல் ஆகிவிட்டது. இந்த நிலை மாறிட ஸ்திர தன்மையுடன் தொழில் துறை செயல்பட அரசு அதிகாரிகள் உற்பத்தியாளர்கள் தொழில்துறை மற்றும் பயனாளிகள் உள்ளிட்டவர்களை கொண்டு விலை நிர்ணய கமிட்டி அமைக்க வேண்டுகிறோம். விலை ஏற்றம் தடுத்திடவும் நிர்ணயிக்கப்படும் விலையில் மூலப்பொருள்கள் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேற்கண்ட எங்கள் கோரிக்கைகள் பரிசீலித்து குறுந்தொழில்களைப் பாதுகாத்திட உதவிட வேண்டுகிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.