சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறக் குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் பாரபட்சமில்லாமல் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை: கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில் குப்பை மற்றும் சாக்கடை சரிவர அகற்றப்படுவது இல்லை என்றும் குடிதண்ணீர் வினியோகத்தில் குளறுபடி நடப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேரன்மாநகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-
சேரன் மாநகரில் 568 வீடுகள் உள்ளன. இங்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வீடுகளுக்கே வந்து குப்பைகள் பெறப்பட்டு வந்தது. 10 நாட்களுக்கு ஒரு முறை வீட்டின் முன் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் சமீப காலமாக வாரம் ஒரு முறை மட்டுமே குப்பைகள் பெறப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன.மாதம் ஒரு முறை மட்டுமே சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால் சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சேரன்மாநகர் குடியிருப்புப் பகுதி முழுவதும் சாக்கடை கால்வாய் கட்டமைப்பு வசதி சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் பல ஆண்டுகளாகப் பராமரிப்பு பணி சீரான முறையில் மேற்கொள்ளப்படாத காரணத்தால், சாக்கடை கால்வாயில் கழிவு நீர் செல்லாமல் பல இடங்களில் தேங்கி நிற்கின்றன. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர சேரன்மாநகர் குடியிருப்பு பகுதிகளில் வாரம் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது வாரம் ஒரு முறை மட்டுமே பெரும்பாலும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன. சுற்றுப்புறக் குடியிருப்புப் பகுதிகளில் மிக அதிக நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு தண்ணீர் வீணடிக்கப் படுகின்றது.
எனவே சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறக் குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் பாரபட்சமில்லாமல் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது,"கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 8,700 குடியிருப்புகள் உள்ளன. 27-தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
மேலும் 15-தூய்மைப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.இது தவிர குப்பை அள்ளி கொண்டு செல்வதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள தள்ளு வண்டிகளும் சிதலமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. இவற்றை அகற்றி விட்டு12-புதிய தள்ளுவண்டிகள் தேவைப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்த தேவைப்படும் உபகரணங்கள் பற்றாக்குறை மிக அதிகளவில் உள்ளது.
சாக்கடை அள்ளுவதற்கு பயன்படும் உபகரணம் 30-தேவைப்படுகின்றன. அதேபோல் முள்ளு கொத்து என்று கூறப்படும் உபகரணம் 30-தேவைப்படுகிறது. பெரிய சீமார், முப்பது தேவைப்படுகின்றது. தற்போது ஒரு டாடா ஏஸ் வாகனம் மட்டுமே உள்ளது. மேலும் ஒரு டாட்டா ஏஸ் வாகனம் தேவைப்படுகிறது.
இத்தனை பிரச்சினைகள் உள்ள போதும் தூய்மைப் பணியாளர்கள் முடிந்தவரை வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை தொடர்ந்து மிகுந்த சிரமத்திற்கு இடையே பணிகளை செய்துவிடுகின்றனர். தேவைப்படும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கினால் 22-வது வார்டு பகுதி முழுவதும் தூய்மைய பணி சீரான முறையில் மேற்கொள்ளப்படுவது உறுதிசெய்யப்படும்.
சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் வாரந்தோறும் இரண்டு நாட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் மெயின் பைப் லைனில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் அந்த வாரம் மட்டும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்."
இவ்வாறு மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.