மேலும், திமுகவில் தேர்வானவர்கள் மன்றத்திற்கு புதியவர்கள் என்றாலும், இயக்கத்தில் மக்களோடு இணக்கமாக இருந்தவர்கள் என்று கூறினார்.
கோவை: சாமானியர்கள் மேயர், துணை மேயராக முடியும் என்பதை திமுக தலைமை காட்டியிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா பதவியேற்பு நிகழ்விற்குப் பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திமுக அரசின் 9 மாத திட்டங்களுக்கு மணிமகுடமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியினை முதல்வர் வழங்கி வருகின்றார்.
கோவையில் மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி இருக்கின்றனர். ஒரு மனதாக மேயராக கல்பனாவை தேர்வு செய்து இருக்கின்றனர்.
எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் கல்பனா.15 ஆண்டு காலமாக 13 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அவரது கணவர் கால்டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து, தற்போது இ-சேவை மையம் நடத்தி வருகின்றார்.
கல்பனா வெற்றி பெற்ற பின் பேருந்திலே பயணித்து தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றவர். அவரது குடும்பம் இயக்கத்திற்கும், மிசா காலத்திலும் உறுதுணையாக இருந்த குடும்பம்.
மக்களின் இன்ப துன்பங்களை அறிந்த சாமானியர்களை மேயர், துணை மேயராக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்று மதியம் வெற்றி செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டியிடுகின்றார். வட்ட கழக செயலாளராக இருந்தவர் துணைமேயராக தேர்வு செய்யப்பட இருக்கின்றார்.
நிறைய பேர் பெரிய பொறுப்பில் இருந்தபடி மேயர், துணை மேயர் பதவிகளை எதிர்பார்த்த வேளையில், சாமானியர்கள் மேயர், துணை மேயராக முடியும் என்பதை திமுக தலைமை காட்டியிருக்கின்றது.
திமுகவில் தேர்வானவர்கள் மன்றத்திற்கு புதியவர்கள் என்றாலும், இயக்கத்தில் மக்களோடு இணக்கமாக இருந்தவர்கள்.
தேவை ஏற்பட்டால் பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.