இந்த விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசுப் பேருந்து மற்றும் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளுடன் இன்று காலை சத்தியமங்கலத்துக்கு அரசு பேருந்து ஒன்று பயணித்தது.
அந்த பேருந்து சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு என்ற இடத்தில் வந்த போது, தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தனியார் தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதியது. இதில் அரசு பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுமுகை காவல் நிலையத்திற்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சிறுமுகை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த ஏழு பேருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.