தேக்கம்பட்டி அருள்மிகு ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 3.30 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
மேட்டுப்பாளையம்: தேக்கம்பட்டி அருள்மிகு ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 3.30 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அருள்மிகு ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் திருக்கோவிலிருந்து வருகிறது.
இக்கோவிலில் அமாவாசை உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்களில் கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்குக் கிடா வெட்டியும்,மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம்.
அதேபோல் ஆடிக்குண்டம் திருவிழா இக்கோவிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இக்கோவிலுக்கென தேக்கம்பட்டி கிராமத்தில் 14.39 ஏக்கர் கோவில் நிலம் சொந்தமாக இருந்து வந்தது.இக்கோவிலின் முன்னாள் பூசாரி தங்கவேல் என்பவர் கோவில் நிலத்தில் 3.30 ஏக்கர் நிலத்தை தனக்கே உரிமையானது என சொந்தம் கொண்டாடி வந்ததோடு கோவை மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் 1992 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு தங்கவேலுவிற்கு சாதகமாக அமைந்தது.
இதனை எதிர்த்து கோவில் சார்பில் கோவை சப் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கோவிலுக்குச் சாதகமாக வந்தது. மேலும், பூசாரி தங்கவேல் இறந்து விட்டதால் அவரது மகன்களான மைனர்களாக இருந்த மோகன்ராஜ், காளிமுத்து உள்ளிட்டோரின் காப்பாளர் என்ற முறையில் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றார்.
வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து கோவிலுக்குச் சாதகமாகச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சுமார் 8 கோடி மதிப்பிலான 3.30 ஏக்கர் மதிப்பிலான இந்த நிலமானது இன்று போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ஷர்மிளா, வன பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்ஷினி முன்னிலையில் மீட்கப்பட்டது.
அந்த நிலத்தில் மரங்களை மட்டும் விட்டு விட்டு ஓட்டு வீடுகள், செடிகள் உள்ளிட்டவை முழுவதுமாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் இது கோவிலுக்கு சொந்தமான நிலம். இந்நிலத்தில் அத்துமீறி யாரும் பிரவேசிக்கக் கூடாது.
மீறினால் நீதிமன்றம் மற்றும் அறநிலையத்துறை சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விளம்பர பதாகை வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள 3.30 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஆன்மீக பெரியோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.