இந்த யானைகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதனால் மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில், சிறுமுகை வனப்பகுதிக்குள் இருந்து வெளிவந்த 6 யானைகள் கூட்டம் பவானி ஆற்றின் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளதால் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் லிங்காபுரம் பகுதியை விட்டுச்செல்ல முடியாமல் ஊருக்குள்ளேயே முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு சிறுமுகையில் இருந்து லிங்காபுரம் செல்லும் சாலை அருகிலேயே நின்ற யானைகளால் நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், வனத்துறையினர் மற்றும் பொது மக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மீண்டும் சென்றது.
மேலும், 6 காட்டு யானைகள் கூட்டம் இன்று அதிகாலையிலேயே வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் சத்தமிட்டு விரட்டியடித்தனர்.
இதனிடையே, காட்டு யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என லிங்காபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.