பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 40 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என்று திருப்பூர் காவல்துறை ஆணையர் வனிதா தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் போலீசார் வாகன சோதனையின் போது ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்தவரை கைது செய்து, அவரிடமிருந்து 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 350 கிலோ அளவுள்ள விலையுயர்ந்த கஞ்சாவை அனுப்பர்பாளையம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு காவல் நிலைய சரகத்தில் சுமார் 15 கிலோ அளவுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேற்படி, வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாநகரத்திற்கு கஞ்சா கடத்தி வந்து வியாபாரம் செய்யும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சென்னகேசவன், தலைமையில் காவலர்கள், திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு நகர் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் படியாக அங்கு வந்த டவேரா (Tavera) காரினை போலீசார் சோதனையிட்டனர். வாகனத்தை சோதனை செய்த போது, அதில் சுமார் 350 கிலோ அளவுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே, 350 கிலோ கஞ்சா மற்றும் கடத்தி வந்த கார் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கஞ்சாவை ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையின்போது ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து டவேரா காரில் கஞ்சாவை கடத்தி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்த 40 லட்ச ரூபாய் மதிப்பிலான.350 கிலோ கஞ்சா, கடத்தி வந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, உயர் ரகத்தை சேர்ந்ததால், அதன் முழுமையான மதிப்பு இதுவரை தெரியாது என்றும், அது ரூபாய் 40 லட்சத்திற்கும் மேல் இருக்க வாய்ப்பு உள்ளது.
சிறப்பாக வாகன தணிக்கை மேற்கொண்டு காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்த அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இளைஞர்கள் நலன் கருதியும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசின் உத்தரவின்படி தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள், கஞ்சா ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனவும் தெரிவித்தார்.