கள் விற்பனை செய்த நவநீதகிருஷ்ணன் (47) என்பவரை கைது செய்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 லிட்டர் கள்ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் கள் விற்றவரை கைது செய்ததை கண்டித்து, விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெகமம் போலீசார் ரோந்து சென்றபோது, நாயக்கர் தோட்டம் எனும் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கள் விற்பனை செய்த நவநீதகிருஷ்ணன் (47) என்பவரை கைது செய்து, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த
3 லிட்டர் கள்ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்ததும், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், நெகமம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
கள் விற்பனை செய்த நவநீதகிருஷ்ணனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரை விடுவிக்க முடியாது என்று போலீசார் மறுப்பு தெரிவித்ததால், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் காவல்துறை ஆய்வாளர் சரவண பெருமாள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், சமாதானம் அடைந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.