கடந்த சனிக்கிழமை 15 வயதுடைய சிறுமி காணாமல் போனதாக அவர் தயார் புகார் அளித்துள்ள நிலையில் இன்று குப்பை தொட்டி அருகே, சிறுமி சடலமாக கண்டுபிடிப்பு.
கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்த யமுனா நகர் பகுதியில் புதரில் சாக்கு மூட்டையில் கை கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளும் துப்புரவு பணியாளர் இன்று குப்பைகளை அள்ளி கொண்டிருக்கும்போது, அங்கு உள்ள புதரில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து கடும் துர்நாற்றம் வருவதை அறிந்து, மூட்டையின் அருகில் சென்று பார்த்தார். அப்போது, சாக்கு மூட்டையில் ஒரு மனித உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்குள்ள பொதுமக்களிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளனர்.
உடனே சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விரைந்து வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கடந்த சனிக்கிழமை அன்று சிவானந்தபுரம் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின், 15 வயது மகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், சாக்கு மூட்டையில் இருந்த உடல் அவர்களது காணாமல் போன மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், கடந்த 8 வருடங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்துவரும், அப்பெண்ணின் தாயார், தனது இரு மகள்களுடன் மாருதி நகர் பகுதியில் கூலி வேலை செய்து வசித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தனது 15 வயதுடைய இரண்டாவது மகள், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.