தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (CODISSIA) தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தொடர்ந்து 22 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளடக்கிய போசியா' கூட்டமைப்பு கொடிசியா மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: 'போசியா' கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல், சிவசண்முககுமார் உள்ளிட்டோர் கூறியதாவது:
தொழில் நகரான கோவையில் தொழில்துறை வளர்ச்சிக்கான தேவைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழில் அமைப்புகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட சங்கத்தை மட்டும் மையமாக வைத்து தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல.
தொழில் நகரில் நடத்தப்படும் தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 22 தொழில் அமைப்புகளை சேர்ந்த எங்களின் 'FOCIA' கூட்டமைப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. இத்தகைய செயலில் ஈடுபடும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்(CODISSIA) மற்றும் மாவட்ட தொழில் மையத்தின்
செயல்பாடு மிகவும் வருந்தத்தக்கது.
தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மட்டுமின்றி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடக்கும் கூட்டம் என்றாலும் எதற்கும் முறைப்படி எங்கள் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவிக்கப் படுவதில்லை.மாறாக சில கோரிக்கைகளில் எங்கள் கூட்டமைப்பின் அனுமதி பெறாமலேயே எங்கள் கூட்டமைப்பின் லோகோ மற்றும் சங்க உறுப்பினர்களின் தொழில் அமைப்பு பெயர்களை பயன்படுத்தி கோவை மாவட்ட தொழில் துறை சார்பில் வைக்கப்படும் கோரிக்கையாகஅரசிடம் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன் எங்கள் கூட்டமைப்பிலுள்ள தொழில் அமைப்பின் நிர்வாகிகளை கலந்தாலோசித்து இருக்க வேண்டும்.
சமீப நாட்களாக இது போன்ற செயல்கள் அதிகரிக்க துவங்கி உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. எங்கள் கூட்டமைப்பில் அனைத்து பிரிவுகளை சேர்ந்த தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளும் உறுப்பினராக உள்ளனர். எனவே எதிர்வரும் நாட்களில் எங்கள் கூட்டமைப்பு சார்பில் தனியாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்