குழந்தை நல மருத்துவர் 'SimpliCity' நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், குழந்தைகளைப் பாதிக்கும் டெங்கு, ப்ளூ காய்ச்சல், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கோவை: குழந்தை நல மருத்துவர் 'SimpliCity' நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், குழந்தைகளைப் பாதிக்கும் டெங்கு, ப்ளூ காய்ச்சல், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் அதன் காரணமாகத் தேங்கும் தண்ணீரால் உற்பத்தியாகும் டெங்கு கொசுக்கள் காரணமாகச் சமீப நாட்களாக டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதுபோன்று டெங்கு, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவற்றின் அறிகுறிகள் மற்றும் இதுபோன்ற நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, குழந்தை நல சிறப்பு மருத்துவர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவ மனநல ஆலோசகர், டாக்டர் மா. தினேஷ் பெரியசாமி MBBS, DCH, PGDGC, PGCAMH பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
'SimpliCity' நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவியுள்ள சூழ்நிலையில் குழந்தைகளைப் பாதிக்கும் டெங்கு ப்ளு உள்ளிட்ட பல்வேறு விதமான காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மிகவும் பீதி அடைகின்றனர்.
அறிகுறிகளை முன்னரே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால் கொரோனா உள்ளிட்ட எந்தவிதமான காய்ச்சல் காரணமாகவும் குழந்தைகள் உடல்நிலை மிகவும் பாதிப்படையாமல் இருப்பதைத் தடுக்க முடியும் தவிர நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வரவும் முடியும்.
தற்போதைக்கு 'ஓமைக்ரான்' நோய் பாதிப்பு குறித்தும் மிகவும் கவலையடையத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உலக அளவில் எந்த நாட்டிலும் பீதி அடையும் அளவுக்கு இல்லை என்பதே இதற்குக் காரணமாகும்.
காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கண்காணிக்க டிஜிட்டல் தெர்மாமீட்டர் மிகவும் தேவையான ஒரு மருத்துவ உபகரணம் ஆகும்.
மார்க்கெட்டில் பல்வேறு வகையான டிஜிட்டல் தெர்மா மீட்டர்கள் விற்பனைக்கு உள்ளபோதிலும் கைகளில் தோள்பட்டைக்குக் கீழே வைத்து பார்க்கும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் மட்டுமே சரியான உடல் வெப்பத்தை காண்பிக்கும் என உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்கள், குழந்தைகளின் உடல் வெப்பத்தைக் கண்டறிய இது போன்ற டிஜிட்டல் தெர்மாமீட்டரை பயன்படுத்தலாம். குழந்தையின் உடல் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருந்தாலும் பாரஸ்ட்டமால் மருந்து கொடுக்கலாம். இந்த மருந்து கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு குழந்தையை மருத்துவரிடம் பரிசோதித்த போது அவர் வழங்கிய பரிந்துரை அளவின்படி பாரசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் மருத்துவரை அணுக வேண்டும். பாராசிட்டமால் மருந்து இரண்டு வகை உள்ளன. சிரப் மற்றும் டிராப்ஸ் என இரு வகைகளில் விற்கப்படுகின்றன.
எனவே பெற்றோருக்கு எதை எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்பதில் எப்பொழுதுமே ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். பெற்றோர் தானாக இந்த மருந்தைக் கொடுக்கும்போது குறைவாகக் கொடுத்தாலும், அதிகமாகக் கொடுத்தாலும் அது குழந்தைக்கு உதவாது.
அருகிலுள்ள உள்ள மருத்துவரை அணுகினால் அவர் குழந்தையின் எடைக்கு ஏற்ப தான் இந்த மருந்தைப் பரிந்துரை செய்வார். வயதுக்கு ஏற்ப பரிந்துரை செய்ய மாட்டார். எனவே மருந்து கொடுப்பதில் ஏதேனும் சந்தேகமோ குழப்பமோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சளி, மூக்கு ஒழுகுதல் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாகச் சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தவுடன் பல பெற்றோர் மருந்து கொடுத்தால் அது உடனடியாக சரியாகிவிடும் என்று நினைத்து விடுகின்றனர்.
அது தவறானது. சாதாரண சளி மற்றும் மூக்கு ஒழுகுதல் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதன் காரணமாக வேறு ஏதேனும் பிரச்சனை என்றால் டாக்டரை பார்க்க வேண்டும்.
2. இருமலுக்கு என்ன செய்ய வேண்டும்? எந்த வகையான இருமலாக இருந்தாலும் குழந்தைகளை உடனடியாக டாக்டரிடம் காண்பித்து அவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே இருமல் மருந்து கொடுக்க வேண்டும். தாமாக மருந்து கடைகளில் சென்று அல்லது பெரியவர்கள் குடிக்கும் இருமல் மருந்து உள்ளிட்டவற்றைக் கொடுக்கக்கூடாது.
3. காய்ச்சல் பாதிப்புக்கு எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும். குழந்தைகளுக்குச் சளி, இரும்பல் குறித்த எந்த பிரச்சினையும் இல்லாமல் காய்ச்சல் மட்டும் இருந்தால் 48 மணி நேரம் வரை காத்திருக்கலாம். பாரஸ்ட்டமால் மருந்து 6 மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம். சந்தேகம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
பாரஸ்ட்டமால் மருந்து கொடுத்தால் காய்ச்சல் குறைந்து குழந்தை விளையாட துவங்கினால் 48 மணி நேரம் வரை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பாரஸ்ட்டமால் மருந்து கொடுத்து குழந்தைகளின் உடல் நிலையைக் கண்காணிக்கலாம். அதற்குப் பிறகும் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
பாரசிட்டமால் மருந்து கொடுக்கும் பொழுது சோர்வாகக் காணப்பட்டாலும் தண்ணீர் அதிகம் பருகாமல் வறண்ட நிலை தென்பட்டாலும் மற்றும் வாந்தி எடுத்தல், காய்ச்சல் குறைந்த போதும் குழந்தை சாப்பிடாமல் அழுதுகொண்டே இருப்பது அல்லது சிறுநீர் கழிக்கும்போது அழுவது அல்லது வலிப்பு வந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
4. டாக்டரிடம் காட்ட வேண்டிய சில அறிகுறிகள்: தொடர்ந்து பேதி, பச்சிளம் குழந்தைகள் பால் குடிக்க முடியாமல் திணறினால், காது வலி, காதிலிருந்து சீழ் வடிதல், வழக்கத்தை விட அதிக நேரம் தூங்குவது, உடலின் தோல் பகுதியில் கட்டி, தடிப்பு தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வாயில் புண், வலி அல்லது வயிற்று வலி, வயிறு வீக்கம் சிறுநீர் கழிப்பது குறைவது உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் காட்ட வேண்டும். மூச்சு விட சிரமப்படுதல் நெஞ்சுவலி மூட்டு வலி மூக்கு அல்லது பற்களின் ஈறுகளில் ரத்தக்கசிவு இருந்தால் டாக்டரை பார்க்க வேண்டும்.
5. ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் எப்போது செய்ய வேண்டும்? காய்ச்சல் பாதித்த ஒரே நாளில் பரிசோதனை செய்தால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த பாதிப்புகள் தெரியவராது. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மட்டுமே முதல்நாள் பரிசோதனையில் தெரியவரும். கொரோனா பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் முதல்நாளிலேயே பரிசோதனை செய்ய வேண்டும். மற்ற காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் 48 மணி நேரம் வரை மருத்துவர் அளிக்கும் மருந்துகளைச் சாப்பிட்ட பின் பரிசோதனை மேற்கொள்ளலாம்.
6. தடுப்பு நடவடிக்கைகள் என்ன? வீட்டில் பாரஸ்ட்டமால் மருந்து குழந்தைகள் கை படாத இடத்தில் வைத்துக் கொள்வது மற்றும் ஏற்கனவே கூறியது போல கைகளில் தோள்பட்டைக்குக் கீழே வைத்து பார்க்கும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளலாம். கொசு வலை வீட்டின் ஜன்னல் கதவுகளுக்கு அடித்துக் கொள்ளலாம். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது உடலில் பூசிக்கொள்ளும் கொசு மருந்து பயன்படுத்தலாம்.
எல்லாவற்றுக்கும் மேல், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மட்டும் தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமின்றி அருகில் உள்ள வீடுகளிலும் நிலைமையைக் கண்காணித்து யாரேனும் தண்ணீர் தேக்கி வைத்து இருந்தால் அவரிடம் அப்புறப்படுத்தக் கூறவேண்டும். கேட்காத பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் தினேஷ் பெரியசாமி கூறினார்.