பிளவுபட்ட கணையத்திலிருந்து பாதிக்கப்பட்ட தலைப்பகுதி மற்றும் கற்களை அகற்றி சிறுமிக்கு 4-மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
கோவை: பிளவுபட்ட கணையத்திலிருந்து பாதிக்கப்பட்ட தலைப்பகுதி மற்றும் கற்களை அகற்றி சிறுமிக்கு 4-மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அன்னூரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார்(வயது 35). இவரது மனைவி குணலட்சுமி(வயது 28). இவரது மகள் 12-வயது சிறுமி அனுஸ்ரீ.
இச்சிறுமிக்குக் கடந்த 6-மாதங்களாகத் தீராத வயிற்று வலி, அஜீரண கோளாறு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், மஞ்சள் காமாலை தொற்றும் ஏற்பட்டுள்ளது. கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிறுமியைக் காண்பித்தும் முறையாக சிகிச்சையளித்தும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இறுதியாகச் சிறுமியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர். அங்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கண்ணன் தலைமையில் அச்சிறுமிக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரிசோதனையில் பிறவிசைக்கோளாறு காரணமாகக் கணையம் பிளவுபட்டு இரண்டாகப் பிரிந்துள்ளதும், தலைப்பகுதி முழுவதும் பாதிப்படைந்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுரக்க வேண்டிய நீர் கற்களாக மாறியுள்ளதையும் கண்டறிந்தனர்.
இதனால் தலைமை மருத்துவர் கண்ணன் தலைமையில் மருத்துவர் விஜயகிரி உள்ளிட்டோர் அடங்கிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
சிக்கலான இந்த FREYS OPERATION ஐ சுமார் 4 மணி நேரம் போராடி கற்களை அகற்றிப் பிளவுபட்ட கணையத்திலிருந்து பாதிக்கப்பட்ட தலைப்பகுதி மற்றும் கற்களை அகற்றி குடல் பகுதி வழியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
பல்வேறு வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெறும் இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சையினை தாலுக்கா அளவிலான மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் செய்தது தமிழகத்திலேயே இதுவே முதன்முறையாகும்.
மேலும், சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாகவும், ஒருவார காலத்திற்குச் சிறுமி தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.