அரியர் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: அரியர் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இணைய வழியில் அரியா் தோ்வு நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதன் முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை. இதற்கு இணைய வழியில் நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவர்கள் இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கைகளில் பதாகைகளை ஏந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.