பாரத பிரதமரின் ஆராய்ச்சிக்கான இந்த உதவித் தொகை மாதம் ரூ. 62 ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
கோவை: பாரதப் பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

இவ்வாண்டுக்கான பாரதப் பிரதமரின் கல்வி உதவித் தொகையைப் பெற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் நானோ அறிவியல் தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிக சிறப்பு வாய்ந்ததாகவும், பாரத பிரதமரின் நேரடி கல்வி உதவித்தொகையாக இந்த உதவித்தொகை பார்க்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையானது "ஆளில்லா விமானம் மூலம் நானோ உர உருவாக்கம் பயிர்களின் ஊடே ஊடுருவி செலுத்தும் முறை" என்ற தலைப்பில் முனைவர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பிரதீப் என்ற மாணவருக்கும், "தாவர நூற்புழு பூஞ்சை நோய்க் கிருமிகளை அழிக்க உயிர் கலப்பின நோய்க்கிருமிகளை பயன்படுத்துதல்" என்ற தலைப்பில் முனைவர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் சண்முகபிரியா என்ற மாணவிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது,
ஒவ்வொரு ஆண்டும் பாரதப் பிரதமரின் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இவ்வாண்டு மொத்தம் நாடு முழுவதும் 37 பேருக்கு வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மூவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாகவும், அதிலும் கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நானோ தொழில் நுட்பவியல் துறையில் பயிலும் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தவர்கள் ஒரே துறையின் கீழ் கிடைத்தது பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்தனர்.
பாரத பிரதமரின் ஆராய்ச்சிக்கான இந்த உதவித் தொகை என்பது மாதம் ரூ. 62 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும், நான்கு ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தவர்கள் இந்த உதவித்தொகையானது தங்களின் ஆராய்ச்சிக்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.
விவசாயத்துறையில் தாங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் புது புது தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த உதவித்தொகை மேலும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நானோ டெக்னாலஜி துறையின் தலைவர் லட்சுமணன் கூறும்பொழுது,

பாரத பிரதமரின் அறிவியல் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது மாணவர்களை மென்மேலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் அதிலும் ஒரே துறையில் பயிலும் இரு மாணவர்களுக்கு பாரத பிரதமரின் உதவித்தொகை கிடைத்து இருப்பது தமிழ்நாடு பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக தெரிவித்தார். மேலும், இதுபோன்ற உதவித்தொகை புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.