மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும்போது திடீரென கார் தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், ஆட்சியர் வளாகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறை தீர்பு நாள் நடைபெற்று வருவது விளக்கம்.
அதன்படி, குறைதீர்ப்பு நாளான இன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் காலை 8 மணி முதல் மனு கொடுக்க வந்தபடி உள்ளனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கார் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும்போது திடீரென தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பானது.
இதையடுத்து, உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த நபர்கள் தீயணைப்பு கருவி எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் இருக்கக்கூடிய இடத்தில் திடீரென தீ பற்றியதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.