பெள்ளாதி குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறும் போது மீன்கள் வெளியேறும் நிலை உருவாகி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே மீன்களைப் பிடிக்கச் சங்க உறுப்பினர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
கோவை: காரமடை அருகே பெள்ளாதி குளத்தில் மீன் பிடிக்கும் பணி முன் கூட்டியே தொடங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை பெள்ளாதி குளம் 100-ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் பொது பணித்துறைக்குச் சொந்தமானது. இக்குளத்தை மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஏலத்தில் எடுத்து கட்லா, ரோகு, பில்லுக்கெண்ட, சி.சி, மிருகால் உள்ளிட்ட மீன்களை விட்டு வளர்த்து வந்தனர்.
பின்னர் 8-மாதம் கழித்து மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், இந்தாண்டு இச்சங்க நிர்வாகி மோகன்ராஜ் ஏற்பாட்டில் ரூ. 3-லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டது. தற்போது இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இச்சூழ்நிலையில், குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறும் போது மீன்கள் வெளியேறும் நிலை உருவாகி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே மீன்களைப் பிடிக்கச் சங்க உறுப்பினர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி வெள்ளிக்கிழமை குளத்தில் மீன்கள் பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.
குளத்தில் சுமார் ஒன்றை டன் அளவில் மீன்கள் பிடிக்கப்பட்டு உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டது. மேலும் அதிகபட்சமாக ரோகு வகை மீன் அதிகமாக 7- வரை வளர்ந்து குளத்தில் பிடிபட்டுள்ளன.
மீன்பிடிக்கும் தொடக்க நிகழ்ச்சியில் தலைவர் பழனிச்சாமி, இயக்குநர் மீன்நட்ராஜ், சங்க உறுப்பினர் தேவராஜ், முன்னாள் தலைவர் சுப்பிரமணி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, இந்த குளத்தில் தலா 7-கிலோ எடை கொண்ட ரோகு மீன்கள் பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.