வாடகை பாக்கி செலுத்தாமல் சீல் வைக்கபட்ட நகராட்சி கடைகளை அத்துமீறி சீலை உடைத்து கடையை திறந்த 22 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், அத்துமீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்: வாடகை பாக்கி செலுத்தாமல் சீல் வைக்கப்பட்ட நகராட்சி கடைகளை அத்துமீறி சீலை உடைத்து கடையைத் திறந்த 22-கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அத்துமீறியவர்கள் மீது சிவில் வழக்கு தொடர உள்ளதாக நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குச் சொந்தமாக 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை ஏல முறையில் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்ததால் நகராட்சிக்கு சுமார் ரூ.8.50-கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, நகராட்சி ஆணையாளர் வினோத் கடந்த மாதம் 27-ம்தேதி வாடகை நிலுவைத்தொகை வைத்திருந்த 22-கடைகளுக்கு அதிரடியாகச் சீல் வைத்தார்.
இந்த நிலையில் நேற்று கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் பாக்கி தொகையைச் செலுத்தாமலேயே சீல் வைத்ததை உடைத்து அத்துமீறித் திறந்தனர்.
இச்சம்பவம் குறித்து நகராட்சி மூலம் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் ஏற்கனவே சீல் வைத்து அனுமதி இல்லாமல் திறந்த கடைகளுக்கு மீண்டும் காவல்துறை பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அப்போது, சீல் வைக்க வந்த நகராட்சி அதிகாரிகளிடம் கடையை ஏலம் எடுத்த உரிமையாளர் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி விதிகளை மதிக்காமல் அத்துமீறி சட்ட விரோதமாகச் சீல் வைக்கப்பட்டதை அகற்றிய காரணத்திற்காக 22 கடைகளை ஏலம் எடுத்தவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட கடைகளில் அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அரசின் சீலை அகற்றிய குற்றத்திற்காக சிவில் வழக்கு தொடர உள்ளதாகவும் நகராட்சி ஆணையாளர் வினோத் தெரிவித்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.