ஓமிக்ரான் என்கிற புதிய வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக உள்ளது.
கோவை: உலகையே அச்சுறுத்தும் புதிய வகை ஒமிக்ரான் வைரசை கண்டுபிடிப்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் 5,000 டேக்பாத் கிட் (TaqPath) தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.
ஓமிக்ரான் என்கிற புதிய வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இந்த வைரசை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் 12 மருத்துவமனைகளில் ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி ஆய்வக துறையில், ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்படும் ஆய்வகத்தில் ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரசை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
5,000 டேக்பாத் கிட் (TaqPath) இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தில் ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக புதிய வகை வைரசை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் டேக்பாத் (TaqPath) என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கோவை அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் டேக்பாத் கிட் (TaqPath) தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரசில் 2 வகையில் பிரித்து மரபணுக்கள் எடுக்கப்படும். அதுவே டேக்பாத் கிட் (TaqPath) பரி சோதனையானது மரபணுக்களை 3 வகைகளாக பிரித்து பரிசோதிப்பது ஆகும், 3-வது வகை மரபணுவில் புதிய ஒமிக்ரான் அல்லது வேறு ஏதேனும் புது வைரஸ் உள்ளதா என்பது குறித்து கண்டறியலாம்.
தற்போது இதுவரை யாருக்கும் இந்த பரிசோதனை செய்யப்படவில்லை. தேவைப்படும் பட்சத்தில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மரபணுக்களைப் பிரித்து மட்டுமே இங்கு பரிசோதனை செய்யவும் முடியும். அது என்ன வகையான வைரஸ் என்பதை அறிய சென்னையில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.