இதற்காக, நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளியை அரசு கொள்முதல் செய்து பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
கோவை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக, காய்கறி விலை உயர்ந்து வருகிறது, குறிப்பாக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 120 முதல் 140 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால், காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிச் சந்தையை விட குறைந்த விலையில் தக்காளி கிலோ ரூ 85-100 என குறைந்த விலையில், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும், என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருந்தார்.
இதற்காக, நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளியை அரசு கொள்முதல் செய்து பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
கோவையில் 10 இடங்களில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை..!
அதன்படி, இன்று முதல் கோவையில் டி.யு.சி.எஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் இடங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது.
கோவையில் கூட்டுறவு துறை நடத்தும் சிந்தாமணி தலைமை அலுவலகம், மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிட வளாகம், சிந்தாமணி என்.எஸ்.ஆர் சாலை கிளை அலுவலகம், மலர் அங்காடி கட்டிட வளாகம், பூ மார்க்கெட், ஆவின் பால் விற்பனை அலுவலக வளாகம், தெலுங்குபாளையம் கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகம், பாப்பநாயக்கன்பாளையம் கூட்டுறவு பண்டக வளாகம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய காய்கறி வளர்ப்போர் சங்கம், மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம், ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய 10 இடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ 75 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மக்களின் தேவைக்கேற்ப கொள்முதலை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும், என கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.