இந்தாண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது. 14 மாவட்டங்களில் இயல்பு மழையை காட்டிலும் கூடுதலாகப் பெய்துள்ளது.
கோவை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் பற்றி மாதம்தோறும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கண்காணிப்பு கிணறுகளில் இம்மாதம் முதல் வாரத்தில் நடத்திய ஆய்வு விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தேனி மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் 1.73 மீட்டர், காஞ்சிபுரம் 2.75 மீட்டர், திருவண்ணாமலை 4.81 மீட்டர், வேலூர் 3 மீட்டர், கள்ளக்குறிச்சி 3.50 மீட்டர், விழுப்புரம் 3.66 மீட்டர் நிலத்தடி நீர், முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.
அதேபோல, சேலம் 0.95 மீட்டர், நாமக்கல் 0.80 மீட்டர், ஈரோடு 1.62 மீட்டர், கோவை 0.20 மீட்டர், திருப்பூரில் 1.74 மீட்டர், நீலகிரி 0.37 மீட்டர் என நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.
மதுரை 2.39 மீட்டர், சிவகங்கை 2.48 மீட்டர், திண்டுக்கல் 2 மீட்டர், விருதுநகர் 3 மீட்டர் அதிகரித்த நிலத்தடி நீர், தேனியில் மட்டும் 1.77 மீட்டர் சரிந்துள்ளது. இதேபோல நெல்லை 2.74 மீட்டர், தென்காசி 2.40 மீட்டர், தூத்துக்குடி 1.84 மீட்டர், கன்னியாகுமரி 1.09 மீட்டர் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.
இந்தாண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. 14 மாவட்டங்களில் இயல்பு மழையை காட்டிலும் கூடுதலாக பெய்துள்ளது.
அதேபோல, வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இவ்வாறு, தொடர்ந்து பெய்யும் மழையே மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.