தடாகம் பகுதியில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து சட்டவிரோதமாகச் செங்கற்களைக் கடத்தி வந்த லாரி வனத்துறை வாகனம் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து லாரியினை துரத்தி பிடித்தனர்.
கோவை: தடாகம் பகுதியில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து செங்கற்களைக் கடத்திய லாரி வனத்துறை வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியநிலையில், அதிர்ஷ்டவசமாக வனத்துறையினர் உயிர் தப்பினர்.
கோவை மாவட்டம் தடாகம், சின்னத் தடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன.
தடாகம் பள்ளத் தாக்குப் பகுதியில் தடை செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான ஆழத்தில் செம்மண் தோண்டப்பட்டது. மேலும், இப்பகுதிகள் HACA கமிட்டியின் கீழ் வருவதால் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது.
அளவுக்கு மீறிய கட்டுமானங்கள் கட்டக் கூடாது என்ற அரசின் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவினை செங்கல் சூளைகள் முறையாகப் பின்பற்றாமலும், அளவுக்கு அதிகமான காற்று மாசினை ஏற்படுத்தியதன் காரணமாகச் சென்னை உயர்நீதி மன்றம் இப்பகுதிகளில் செங்கல் சூளைகள் செயல்படக் கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து செங்கல் சூளைகள் மூடப்பட்டன. ஆனாலும் சூளைகளில் இருக்கும் செங்கற்களை இரவு நேரங்களில் சூளை உரிமையாளர்களால் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த கணுவாய் பிரிவு அருகே வனத் துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, சட்டவிரோதமாகச் செங்கற்களைக் கடத்தி வந்த லாரி வனத்துறை வாகனம் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து லாரியினை துரத்தி பிடித்தனர். இதில் வனத்துறை வாகனம் சேதமடைந்தது. வனத்துறையினர் தடாகம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் அளித்த புகாரின் பேரில் TMT செங்கல் சூளை உரிமையாளர் அருண், லாரியின் டிரைவர், தமிழரசன் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து செங்கற்கள் கடத்தி வரப்படுவது தொடர் கதையாகி உள்ளதால் இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்ந்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தி.மு.க வின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.