கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது., அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவை: கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், பருவமழை காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு, 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் பருவநிலை மாற்றத்தால், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 20க்கும் மேற்பட்டோர் வைரல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் வருவதை எளிமையாக தடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். வீட்டை சுற்றியுள்ள பழைய பொருட்கள், சிமெண்ட் தொட்டிகள், தேங்காய் கொட்டாசிகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பாதுகாத்துக் கொண்டால், டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.