இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை: 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனனும் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணனுக்கும், பாஜகவினருக்கும் இடையே எற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
அப்போது, பாஜகவினர் தன்னை தாக்கியதாக கூறி, ஆதிநாராயணன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடைவீதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது, இன்று கோவை கூடுதல் நீதிமன்றம் எண் 5ல் நடைபெற்ற போது விசாரணைக்காக, பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.