கோவை பழனி இடையேயான பயணியர் இரயில், 2-ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் விரைவு இரயிலாக மீண்டும் இயங்க துவங்கியது. இதனைக் கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை பழனி இடையேயான பயணியர் இரயில், 2-ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் விரைவு இரயிலாக மீண்டும் இயங்க துவங்கியது. இதனைக் கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும், முன்பதிவு செய்யாமல் பயணிக்கக்கூடிய பயணியர் இரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளதால், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் பயணியர் இரயில் சேவைகளை விரைவு இரயில்களாக மாற்றி, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கோவை பழனி இடையேயான விரைவு இரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவங்கியது. கோவை இரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி வழியாகப் பழனி வரை இயங்கும் இந்த இரயிலுக்குக் கட்டணமாகக் குறைந்தபட்சமாக 30 ரூபாயும், அதிகபட்சமாகப் பழனி வரை 55 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
மதியம் 2.10 க்கு கோவை இரயில் நிலையத்திலிருந்து கிளம்பி, மாலை 4.40 மணிக்குப் பழனிக்குச் சென்றடையும்.
அங்கிருந்து பழனி - மதுரை விரைவு இரயிலாக மாற்றப்பட்டு மாலை 7.40 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக பழனியிலிருந்து காலை 11.15 மணிக்குக் கிளம்பி, கோவை இரயில் நிலையத்தை மதியம் 2 மணிக்கு வந்தடையும்.
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்படுவதால் இந்த இரயிலுக்குப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த இரயிலைக் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் பச்சை கொடியசைத்துத் துவக்கி வைத்ததோடு, பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையிலிருந்து பழனிக்குச் செல்லும் இந்த இரயில் மூலம், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகிய வழிபாட்டுத் தளங்களுக்கும், கொடைக்கானல், வால்பாறை போன்ற சுற்றுலா தளங்களுக்குக் குறைந்த செலவில் செல்ல, பொதுமக்களுக்கு உதவும் என தெரிவித்தார்.
இந்த இரயில் சேவையை, பயணிகள் இரயிலாகக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கோவை பொள்ளாச்சி இடையே இரயில் சேவை துவங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், குறைந்தபட்சம் கட்டணமாக இருந்த 10 ரூபாயை, விரைவு இரயில் என்ற பெயரில் 30 ரூபாயாக உயர்த்தி இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.