திருச்சி ரோட்டில் வாலாங்குளம் உபரி நீர் ஆறாக ஓடும் பகுதிகளை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டு, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உடனடியாக இதைச் சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கோவை: கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் வாலாங்குளம் உபரி நீர் ஆறாக ஓடும் பகுதிகளை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.
கோவையில் பெய்துவரும் கனமழையால் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வாலாங்குளம் உபரி நீர் மற்றும் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கழிவுநீர் வழிப்பாதைகளைப் பராமரிக்காததால் சாலையில் துர்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
சாலையில் ஓடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக அச்சப்படுகிறார்கள்.
இந்த தகவலை அறிந்த கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாலாங்குளம் பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடைகளை, ரோடுகளில் ஓடும் உபரி நீர்களை நேரில் பார்த்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உடனடியாக இதைச் சீர் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.