குழிக்குள் விழுந்த ஆண் யானை வனப்பகுதிக்கு வெளியே சுமார் 250 மீ. தொலைவில் பட்டா நிலத்தில், சோர்ந்து படுத்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குழிக்குள் விழுந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த 6ம் தேதி, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு, நாய்க்கன்பாளையம் தெற்கு சுற்று அருகிலுள்ள CRPF முகாமிற்குள், சேற்றில் குழிக்குள் வழுக்கி விழுந்த ஆண் யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர்.
மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த யானை உற்சாகமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், அந்த யானையின் உடல் நிலையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் அந்த ஆண் யானை வனப்பகுதிக்கு வெளியே சுமார் 250 மீ. தொலைவில் பட்டா நிலத்திற்கு வந்து, சோர்ந்து சாய்ந்து படுத்துவிட்டது.
இதையடுத்து, உடனடியாக யானைக்கு சிகிச்சை அளிக்க முதுமலை வனக் கால்நடை மருத்துவர் Dr.ராஷேஸ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் Dr.வெற்றிவேல் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.