கைரேகை பதிவுகளையும் மற்றும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 131 சவரன் நகை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் வேலவன் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரது மகன் தினகரன் (44) தனது மனைவி இரு குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். இவர் வெள்ளக்கிணறு பகுதியில் தினகரன் என்ற பெயரில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு இன்று அதிகாலை 2 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பியவர், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தினகரன் வீட்டினுள் சென்று பார்த்தபோது முன் அறையில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இருந்தது மற்றும் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 10 சவரன் மாங்கா மாலை, 10 சவரன் தங்க ஆரம், 28 சவரன் வளையல், 20 சவரன் கம்மல் செட், 10 பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் உள்ளிட்ட மொத்தம் 131 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து, தினகரன் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்ததுடன் கைரேகை பதிவுகளையும் மற்றும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே இக்கொள்ளை சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இரவு நேரங்களில் காவல்துறை சரியான ரோந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய கொள்ளைச் சம்பவங்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.